2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கஹாவத்தையில் தொடர்ந்து பதற்றம்

George   / 2015 மே 29 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

கஹாவத்தை கொட்டகெத்தன பிரதேசத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட வழங்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூன்று பேர் நிரபராதிகள் என நேற்று(28) வியாழக்கிழமை தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் அம்மூவரையும் நேற்று விடுதலை செய்யப்பட்டதையடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஹாவத்தை நகரில் கொட்டகெத்தன பிரதேசவாசிகள் உட்பட கஹாவத்தை பிரதேச பொது மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தினர்.

வியாழக்கிழமை (28) மாலை 4.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் அதிகாலை 12.45 வரை தொடர்ந்ததுடன் சுமார் 2,000க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தவதற்கு  பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர்கள் கஹாவத்தை நகரில் குவிக்கப்பட்டு ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம் செய்தும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

தண்ணீர் தாரை பியோகம் செய்த வண்டியின் மீதும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் இரண்டு பொலிஸார் காயமடைந்த நிலையில் காஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமிடையில் நேற்றிரவு(28) 11.45 மணியளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 

இக்கலந்துரையாடலின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் பொலிஸாரிம் கோரிக்கை விடுத்தனர்.  இதற்கு பதிலலித்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்று அவர்களிடம் கூறினர்.

இதனையடுத்து இன்று அதிகாலை 12.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதுடன் தடுப்பபுகளால் மறைக்கப்பட்டிருந்த காவத்தை நகர பிரதான வீதியும் திறக்கப்பட்டது. 

இதனையடுத்து இடைநிறுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய போக்குவரத்துச் சேவை எட்டு மணித்தியாலங்களுக்கு பின்பு வழமைக்கு திரும்பியது. 

வீதியில் போடப்பட்டிருந்த தடைகள் மற்றும டயர்களை இன்று(29) காலை கஹாவத்தை பிரதேச சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டாலும் காஹவத்தை நகரில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதுடன் பொலிஸார் மற்று விசேட அதிரடி படையினரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .