2025 ஜூலை 03, வியாழக்கிழமை

மாணவர்களின் கல்வியில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

தோட்டப்புற பாடசாலைககளில் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்கள் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்று சப்ரகமுவ மாகாண சபையின் இ.தொ.கா. உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தில் ஆசிரியர் உதவியாலர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை(27) சப்ரகமுவ மாகாண  சபையின் மத்திய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
தோட்டப்புற பாடசாலைகள் 5ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை உயர்த்தப்படுகின்றமை வரவேற்கத்தக்க விடயமாகும். ஆனால், 10ஆம் வகுப்பு ஆரம்பித்தால் மட்டும் போதாது மாணவர்களின் கல்வியிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

சப்ரகமுவ மாகாணத்தில் 5ஆம் வகுப்பு வரை காணப்பட்ட தோட்டப்பாடசாலைகள் 10ஆம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டுள்ளது. அநேகமான தோட்டப் பாடசாலைகளில் 10ஆம் வகுப்பு வரை உள்ள போதிலும் அப்பாடசாலைகளுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்து காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. கடந்த வருடம் சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் மூலம் தமிழ்மொழியிலான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

மேற்படி மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரிகள் இல்லாத காரணத்தால் வெளி மாவட்டங்களிலிருந்து 300க்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ்மொழி பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது.

இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரிகள் உருவாகியிருந்தால் அவர்களுக்கே இந்நியமனம் கிடைத்திருக்கும்.

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தோட்டப் பாடசாலை மாணவர்கள் 5ஆம் 6ஆம் 7ஆம் வகுப்புகள் வரை கல்வி கற்றுவிட்டு, பாதியில் பாடசாலையிலிருந்து இடை விலகி மாணவர்கள் ஏதோ ஒரு தொழிலை தேடி செல்கின்றனர். இந்நிலை மாற வேண்டும் எமது சமுகத்திலும் பட்டதாரிகள் உருவாக வேண்டும்.

தோட்டப் பாடசாலையிலிருந்து நகர பாடசாலைக்கு செல்லும்போது அப்பாடசாலையில் அம்மாணவனை சேர்த்து கொள்வதற்கு வாய் மூலம் மற்றும் எழுத்து மூலம் பரீட்சைகள் நடாத்தப்படும். அப்போது அம்மாணவனுக்கு வாசிக்கவோ எழுதவோ தெரிந்திருக்காது. இவ்வாறான சம்பவம் இம்மாகாணத்தில் அநேகமான பாடசாலைகளில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு காரணம் தோட்டப் பாடசாலைகளுக்கு பாடங்களுக்கு தேவையான ஆசிரியர் இல்லாமையும் மாணவர்களின் கல்வியில் ஆசிரியர் அக்கறை செலுத்தாமையுமாகும்.

மாணவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த சமுகத்தை உருவாக்கி கொடுப்பதும் சிறந்த கல்வியை பெற்று கொடுப்பதும் ஆசிரியர்களின் பொறுப்பாகும். அதேவேளை தமிழ் சமுதாயத்தை சிறந்த முறையில் கட்டி எழுப்புவதுக்கு கல்வி அவசியம்.
ஆசிரியர் சேவை விலை மதிக்க முடியாத சொத்தாகும். ஆசிரியர்கள் தமது பணியை தொழிலாக நினைத்து செய்யாமல் சேவையாக எண்ணி மலையக தமிழ் மாணவர்களை பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்கு அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .