2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் எதிர்கால திட்டங்கள் வகுக்கப்படும்: வீ.இராதா

Menaka Mookandi   / 2015 ஜூன் 04 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சுதர்ஷினி, வி.நிரோஷினி

சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எடுத்துச்செல்வதுடன் அவர்களுடைய அபிலாஷைகள், எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையிலான எதிர்கால திட்டங்களை வகுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி முனைப்புடன் செயற்படும் என அக்கூட்டணியின் இணைத் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலின் கோல்டன் பொன்ட் மண்டபத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு செயற்படுகின்றதோ அவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியும் எம்மக்களின் நலனுக்காக செயற்படும்' என்றார்.

'மலையகத்திலிருந்தும் ஏனைய பகுதிகளிலுமிருந்து வந்து கொழும்பில் மாத்திரம் கடைகளிலும் ஏனைய இடங்களிலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் வேலை செய்கின்றனர். அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இங்கு வேலை செய்கிறார்கள். இவ்வாறாக, ஒவ்வொரு மாவட்டத்தையும் மாகாணத்தையும் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை அனுபவித்தே வருகின்றனர். அவற்றை தீர்ப்பதற்கு எமது கூட்டணி முழு மூச்சுடன் செயற்படும்' என்றும் இராதாகிருஸ்ணன் கூறினார்.

'மேலும், கடந்த 2013ஆம் ஆண்டில், சம்பளப் போராட்டத்தை மட்டும் நோக்காகக் கொண்டு தொழிற்சங்கமொன்று அமைக்கப்பட்டது. இச்சங்கம், இரண்டு வருடங்கள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபட்டது. பின்னர், அதன் செயற்பாடுகள் மந்தமாகிவிட்டன. ஆனால், எமது கூட்டணி அவ்வாறு இல்லை. மக்களின் அபிவிருத்திக்காகவும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இறுதிவரை செயற்படும். அத்துடன், எமது மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் வரை எடுத்துச்செல்லவும் இக்கூட்டணி, முனைப்புடன் செயற்படும்' என்றார்.

'நாம் தனிதனியாக இருந்து செயற்படுவதை விட இணைந்து செயற்படுவதன் மூலம் எமது பலத்தை வெளிக்காட்ட முடியும். அதை இந்த நான்கு மாதத்தில் நாம் உணர்ந்து கொண்டோம்' என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .