2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

“ அனைத்து வைத்தியசாலைகளும் 2020க்குள் அபிவிருத்தி”

Kogilavani   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்,பா.திருஞானம், டி.சந்ரு

“இலங்கையில் இருக்கின்ற அனைத்து வைத்தியசாலைகளையும், 2020ஆம் ஆண்டுக்குள், புதிய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளாக மாற்றி அமைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும். அதனை நிறைவேற்றுவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும்” என, சுகாதார மற்றும் போசணைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“நுவரெலியா பொது வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கு, தரமான புதிய தொழில்நுட்ப முறையிலான வைத்திய உபகரணங்கள் பொருத்தப்படல் வேண்டும். அதைவிடுத்து, தரங்குறைந்த வைத்திய உபகரணங்கள் பொருத்தப்படுமாயின் அதுத் தொடர்பில், ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் நானும் எனது அமைச்சும் ஒருபோதும் தயங்கமாட்டோம்” என்றும் அவர் கூறினார்.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் விடுதிகளில் ஒரு பகுதியை, சுகாதார மற்றும் போசணைகள் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஸ்வரன் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஆகியோர் இணைந்து, சனிக்கிழமை திறந்து வைத்தனர்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
“நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையை பொறுப்பேற்றுள்ள ஒப்பந்தக்காரர்கள் மிக விரைவில் அபிவிருத்திப் பணிகளை, பூர்த்தி செய்ய வேண்டும். அதேநேரத்தில், இந்த வைத்தியசாலைக்கு, மிகவும் தரம்வாய்ந்த, புதியதொழில்நுட்ப வைத்திய உபகரணங்களை மட்டுமே பொருத்த வேண்டும். அதனை விடுத்து, பழைய அதாவது தற்போது நடைமுறையில் இல்லாத உபகரணங்களை எந்தக் காரணம் கொண்டும் பொருத்தக் கூடாது.

“மேலும், தரங்குறைந்த உபகரணங்களை பொருத்த ஒப்பந்தக்காரார்கள் முயற்சி செய்தால், அவர்களின் ஒப்பந்தத்தை இரத்து செய்வதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்லவும் நான் தயாராக உள்ளேன்.

“எங்களுடைய வைத்தியர்களை எக்காரணம் கொண்டும் ஏமாற்ற முடியாது. அவர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்களுக்கு தற்பொழுது நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்கள் தொடர்பில் நன்கு தெரியும்.

“தற்போது எமக்கு, சர்வதேச ரீதியாகவும் பல்வேறு தொடர்புகள் உள்ளன. எனவே நீங்கள் கொடுப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கு, நாங்கள் விடயம் தெரியாதவர்கள் அல்லர்.

“நுவரெலியா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளும் ஏனையவர்களும் தனித்தனியாக பிரிந்து நின்று செயற்படுகின்றார்கள். அவ்வாறு செயற்பட்டால் எதனையும் சாதிக்க முடியாது. எனவே, நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து ஒரணியில் செயற்பட்டால் மாத்திரமே இந்த புதிய வைத்தியசாலையை மிகவிரைவில் திறக்க முடியும்.

“இன்று வைத்திய அதிகாரிகளின் விடுதிகள் மாத்திரமே திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிகவிரைவில் ஏனைய விடுதிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

“நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு மேலதிகமாக வைத்தியர்களை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். நுவரெலியா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படுகின்ற வைத்தியர்கள் இங்கு வருகைத் தர மறுக்கின்றார்கள். எனவே, எதிர்காலத்தில் நுவரெலியா மாவட்டத்துக்கு வருகின்ற வைத்தியர்களுக்கு, மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

“நுவரெலியா பொது வைத்தியசாலையின் பிரதான பாதையை உடனடியாக திருத்த வேண்டும். பாதையின் இரு பகுதிகளையும் பெரிதாக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை சுகாதார அமைச்சும் பாதை அபிவிருத்தி அமைச்சும் இணைந்து செயற்படுத்தும்” என்றார்.

நுவரெலியா பொது வைத்தியசாலையின் புதிய நிர்மாணப் பணிகள் நெதர்லாந்து நாட்டின் 39 ஆயிரம் யூரோ மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான தொகையை கடன் அடிப்படையில் நெதர்லாந்து அரசாங்கம் வழக்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .