2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

‘அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்க இருந்தோம்’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தி, அவற்றை அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கி உரிய வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்திருந்தது என்றும் இப்பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க, பொதுத்தேர்தலில் மக்கள் தங்களுக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள் என்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக, அவர் இன்று (04) விடுத்துள்ள அறிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னரே, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி உதயமானது என்றும் அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலிலேயே, மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கினர் என்றும் எனவே, ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கும் மலையக மக்களின் முழுமையான பங்களிப்பு இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

மலையக மக்களுக்காக, வெளிநாடுகள், வெளிநாட்டு அமைப்புகளுடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி, சிறந்த உறவையே பேணியது என்றும் இதன் பயனாகவே, 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நடவடிக்கை எடுத்தார் என்றும் புஸல்லாவை சரஸ்வதி கல்லூரியில் புதிதாகக் கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கும் இந்திய அரசாங்கத்தால் உதவி அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 900 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கும் இந்தியா முன்வந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள விடயத்தில் அரசாங்கத்தையும் மூன்றாம் தரப்பாக இணைப்பதற்கான நடவடிக்கையையும் கூட்டணி முன்னெடுத்திருந்தது என்று தெரிவித்துள்ள அவர்,  மலையகம் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்க பொறிமுறைக்குள் உள்வாங்கப்படாதிருந்த தோட்டப்பகுதிகள் உள்வாங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தலை சந்திப்பதற்கு தாங்கள் தயார் என்றும் பாதுகாப்பான சூழலில் தேர்தல் நடத்தப்படவேண்டும்; மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காகவே, தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரியிருந்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சுதந்திரமாக தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .