2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’ஆர்மபகால பிரதிநிதிகளாலேயே மலையகம் அபிவிருத்திக் கண்டது’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 01 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“ஆரம்பகால பிரதிநிதிகளாலேயே, மலையகம் அபிவிருத்திக் கண்டு வருகின்றது. தற்போது, மலையகத்தின் பிரதிநிதிகளென மார்தட்டிக்கொண்டிருப்பவர்கள், மலையகத்தில் புதிய மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்திவிடவில்லை” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.

பதுளை, கெப்பிட்டல்சிட்டி விடுதியில், புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

“1977களில், எமது மக்களின் ஏகப் பிரதிநிதியாக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகினார். அத்துடன் அவர், முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் ஏற்று செயற்பட்டார். அதனைத் தொடர்ந்து 1994களில், மலையக பிரதிநிதிகள் 11 பேர், நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தனர்.

“மலையகப் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, பொருளாதாரம் மற்றும் வீடமைப்பு அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சை உருவாக்கி, எமது மக்களின் தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானிடம் ஒப்படைத்தார்.

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் அணுகுமுறையும் சமூக சிந்தனையும், அர்ப்பணிப்புமே எமது மக்களின் இன்றைய மேம்பாட்டுக்கு காரணமாக அமைந்தது. அன்று அரசியல் சாணக்கியத்துடன் மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக, 402 ஆசிரியர் நியமனங்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது.

“அரசினதும், சீடா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களினது உதவிகளுடனும், பங்களிப்புக்களுடனும் பெருந்தோட்டப் பாடசாலைகள் வளம் பெற்றன. மலையகக் கல்வியும் அபிவிருத்திக் கண்டது.

“சௌமியமூர்த்தி தொண்டமானால் பெற்றுக்கொடுக்கப்பட்ட உரிமைகளால், பிரதேச சபைகளுக்கு எம்மவர்கள் பெரும்பாலானோர் தெரிவாகும் சந்தர்ப்பங்களும் கிட்டின. அரசியல் ரீதியிலான அந்தஸ்துகள், எமது சமூகத்தைத் தேடி வந்தன.

“மலையகத்திலிருந்து பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்கு தெரிவாவதற்கும், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானே வழிவகுத்தாரென்பதை, மலையகத்தின் புதிய பிரதிநிதிகள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X