R.Maheshwary / 2022 ஜனவரி 10 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
" நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம் எனத் தெரிவித்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம், இந்த ஆட்சி விரைவில் கவிழ்ந்து, சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும் என்றார்.
இராகலை- வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (10) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
" தான் மக்களுக்காகவே அரசியல் செய்கின்றேன். மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் செய்வதில்லை. அப்படி செய்வதாக இருந்தால் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்கலாம்.
அரசுக்கு வாக்களித்த மக்களே இன்று அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஆளுங்கட்சியில் உள்ளவர்கள்கூட ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.
கோட்டாபய ராஜபக்ஷவே மீட்பாரென புகழாரம் சூட்டியவர்களே இன்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு இந்த அரசை அமைக்க முடியாதென மார்தட்டினர். ஆனால் 2 வருடங்களிலேயே ஆட்டம் கண்டுவிட்டது. இப்படி நடக்குமென எமக்கு தெரியும். அதனால்தான் நாம் எதிரணி பக்கமே இருந்துகொண்டோம். எப்படியும் விரைவில் இந்த அரசு வீட்டுக்கு சென்றுவிடும். உடனே வீட்டுக்கு அனுப்பவும்கூடாது. இந்த ஆட்சியாளர்களின் பலவீனத்தை மக்கள் உணரவேண்டும். அப்போதுதான் இனியும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .