2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இரசாயன மருந்துகளுக்கான ‘தடையை நீக்கவும்’

Kogilavani   / 2017 ஜூன் 14 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி

“இலங்கை அரசாங்கமானது, இரசாயன மருந்துகளைத் தடைசெய்துள்ளதால், பெருந்தோட்டங்களில் மருந்துகளின் பாவனை தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால், பெருந்தோட்டங்கள் காடுகளாக மாறிவருகின்றன” என்று, பெருந்தோட்டக் கம்பனிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர்
எஸ்.அருள்சாமி தெரிவித்தார்.

சௌமியபவனில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் கூறிய அவர்,

“தோட்டத் தொழிலாளர்கள் தொழில்புரிவதற்கு ஏற்றவகையில், தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் காணிகளை துப்பரவாக வைத்திருக்க வேண்டுமென்று, கூட்டொப்பந்தத்தில் சரத்து ஒன்று உள்ளது. பெருந்தோட்டக் கம்பனிகள், இந்தச் சரத்தை மீறிச் செயற்படுவதாக, நாங்கள் கம்பனிகளுக்கு சுட்டிக்காட்டியிருந்தோம்.  

பெருந்தோட்டங்கள் காடுகளாக மாறும் வகையில் தோட்ட நிர்வாகங்கள் செயற்பட்டு வருமேயானால், கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக, இவர்களை நீதிமன்றத்துக்கு முன்பாக நிறுத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தினோம்.  
இதனை ஏற்றுக்கொண்டுள்ள பெருந்தோட்டக் கம்பனிகள், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, தடைசெய்யப்பட்டுள்ள இரசாயன மருந்துகளை, பெருந்தோட்டங்களில் மீண்டும் பயன்படுத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதாகவும் அதுவரை, பெருந்தோட்டங்கள் தொடர்ந்தும் காடாகாமல் இருப்பதற்கு, ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை  பணிக்கு அமர்த்துவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இதேவேளை, பெருந்தோட்டங்களில் தேயிலை பயிரிடப்படாத நிலங்களை, தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு பிரித்துக்கொடுப்பதற்கும் தோட்டக் கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
பிரித்துக்கொடுக்கப்படும் காணிகளில், மலர்வளர்ப்பு, விவசாயச் செய்கையை ஊக்குவிப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதாகவும் விளைச்சலின் பின்னர் அவற்றை சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தோட்டக் கம்பனிகள் தெரிவித்தன” என  அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .