2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’’எந்தத் தேர்தல் வந்தாலும் , தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்’’

Janu   / 2024 மார்ச் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

" எந்தத் தேர்தல் வந்தாலும் மக்கள் நலன் கருதி உரிய நேரத்தில் தகுந்த தீர்மானத்தை எடுப்பேன்." என  தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார் .

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (17) ஹட்டன் அஜந்தா விருந்தகத்தில் இடம்பெற்ற சங்கத்தின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பின்  போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதிச் செயலளார் சோ. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ். பிலிப், நிர்வாகச் செயலாளர் டாக்டர் ஏ. நந்தகுமார், தேசிய அமைப்பாளர் ஜி. நகுலேஸ்வரன், உபதலைவர்கள், உபசெயலாளர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், தலைவிகள், இளைஞர் அமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர் . 

அவர் மேலும் தெரிவிக்கையில்  ,

" இம்முறை தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுவான மேதின விழா இடம்பெறாது. எனவே, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தனித்துவமான மேதின விழாவை தலவாக்கலை நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் காலம் நெருங்குவதால் எமது நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என அரசியல் கட்சிகள் எம்மோடு தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

நாம் எமது மக்கள் நலன்கருதி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். தேர்தல் வெற்றிக்கு மேதினம் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் ஒதுங்கியிருக்க முடியாது. எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் நிச்சயமாக நான் அமைச்சராக இருப்பேன்.

இப்போது எதிரணியில் இருந்தாலும் எனக்கு 85,000 க்கும் மேலான வாக்குகளை அளித்த மக்களுக்கும், என்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கும் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களை ஏமாற்ற மாட்டேன். இப்போதுள்ள அரசாங்கத்தில் பதவிக்காக இணைந்திருந்தால், அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள நிதி இல்லாத நிலையில் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருப்பேன்.

தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்கும் 1700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். அதேநேரம் ஊழியர் சேமலாப நிதியோடு ஒரு கிலோ கொழுந்துக்கு 100 ரூபாய் வீதம் கிடைத்தால் அதையும் வரவேற்கத் தயாராக இருக்கிறேன். தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்கவும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும் தொழிற்சங்க ஒற்றுமை அவசியமாகும்.

அரசியல் ரீதியில் யாரையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. பழைய பாணியில் மக்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்தி, பழிவாங்கும் அரசியல் செய்யும் நோக்கமும் கிடையாது. எனது வயதுக்கும் அனுபவ முதிர்ச்சிக்கும் ஏற்ப, கடந்த கால சேவைகளையும், இளைஞர், யுவதிகளின் வேலை வாய்ப்பு முதலான எதிர்கால வேலைத் திட்டங்களையும் முன்வைத்து சரியான அரசியல் தெளிவை ஏற்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்.

தொழிலாளர் தேசிய சங்கம் வாரிசு அரசியலை மேற்கொள்ளாது. ஜனநாயக ரீதியில் கட்சியைப் பொறுப்பேற்க யாராவது முன்வந்தால் அவர்களுக்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றேன்.”  என குறிப்பிட்டுள்ளார் . 

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .