2025 ஜூலை 16, புதன்கிழமை

ஒருவகைப் பூச்சி இனத்தால் ஏலச் செய்கைக்குப் பாதிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஒருவகைப் பூச்சியினம் (உண்ணி) காரணமாக, மத்திய மாகாணத்தின் வனங்களை அண்மித்த பகுதிகளில் செய்கை பண்ணப்பட்டு வரும் ஏல உற்பத்தியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதென, விவசாயத் திணைக்கள ஆராய்ச்சிப் பணிப்பாளர் பேராசிரியர் சரத்சந்ர தர்மபராக்கிரம தெரிவித்துள்ளார்.

இந்தப் பூச்சியினத்தைக் கட்டுப்படுத்துவதற்கு, இரசாயனத் திரவம் ஒன்று தெளிக்கப்பட்ட போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.

பேராதனை - கெட்டம்பேயில் அமைந்துள்ள, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கூறிய அவர், இந்தப் பூச்சியினமானது, இலங்கைக்கு உரித்தானவை அல்ல என்றும், அவை, இந்தியாவிலிருந்து சட்டவிராதமாகக் கொண்டு வரப்பட்ட ஏலத்திலிருந்தே பரவியுள்ளனவெனவும் குறிப்பிட்டார்.

இந்தப் பூச்சியினம் தற்போது கண்டி, மாத்தளை மாவட்டங்களின் நக்கிள்ஸ் வனப்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்ததுடன், இவற்றை விஞ்ஞான ரீதியில் கட்டுப்படுத்துவதற்காக, ஏற்றுமதி விவசாய ஆராய்ச்சிப் பிரிவு ஊடாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஏலச் செய்கையானது, வனங்களை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்படுவதால், இரசாயன மருந்துகளைத் தெளித்து உண்ணிகளைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், இதனால் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதால், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, விஞ்ஞானமுறை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏலச் செடிகளைத் அழித்து வரும் உண்ணிகளை உணவாக உட்கொள்ளும் காட்டு விலங்குகளை, ஏலப் பயிர்ச்செய்கைப் பகுதிகளுக்கு அனுப்புவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்த அவர், மேற்படி விலங்குகள், குறித்த உண்ணிகளை உட்கொண்டுள்ளனவா என்பது தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தற்காலிகத் தீர்வாக, தாழ் நிலப்பகுதிகளிலும் ஏலப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பது அவசியம் என்று வலியுறுத்திய அவர், குறித்தப் பிரதேசங்களில், இவ்வாறு எவ்வித உண்ணிகளும் பரவாது என்றும், அவ்வாறு பரவினால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .