2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கூலித் தொழிலாளியை நிர்வாணமாகத் தாக்கியவர்கள் விளக்கமறியலில்

R.Maheshwary   / 2022 மே 24 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காமினி பண்டார

மஸ்கெலியா நகரில் கூலித் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவரை, ஆடைகளைக் களைந்து, நிர்வாணமாக தாக்கியவர்களை நாளை (25) வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதவான் பரீட்டீன் உத்தரவிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களுள் நால்வரை நாளை  வரை (25) விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் ஒரு சந்தேகநபர் நோயில் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரத மனைவியால் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் காரணங்கள் முன்வைக்கப்பட்டதை அடுத்து,அவரை 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதில் தாக்குதலுக்கு இலக்கான மஸ்கெலியா- சோளாங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த நபர், மஸ்கெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மஸ்கெலியா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி வரும் சந்தேகநபர்கள். அவர்களின் வர்த்தக நிலையத்தில் கோதுமை மா இன்மையால், வேறொரு கடையிலிருந்து மா மூடை ஒன்றை கொள்வனவு செய்து வருமாறு தெரிவித்து, 5,720 ரூபாயை கூலித் தொழிலாளியிடம் இந்த மாதம் 14ஆம் திகதி வழங்கியுள்ளனர்.

எனினும் அந்த பணம் காணாமல் போனதாகவும் இதனால் சில நாள்களாக அக்கூலித் தொழிலாளி அந்த வர்த்தக நிலையத்துக்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வாரம் அந்த கூலித் தொழிலாளி மஸ்கெலியா நகருக்கு வருகைத் தந்த போது, வர்த்தக நிலைய உரிமையாளரும் மேலும் சிலரும் அந்த நபரை கடைக்குள் இழுத்துச் சென்று, ஆடைகளை களைந்து கடுமையாக தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கானவர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறு தாக்கப்பட்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலானதால் சந்தேகநபர்கள் உடனடியாக மஸ்கெலியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X