எம். செல்வராஜா
பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலை செயலிழந்து போவதைத் தடுப்பதற்காக, சபல்லேவெல மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
சுமார் 60 வருட வரலாற்றைக் கொண்ட குறித்த பாடசாலையில் 6ஆம் ஆண்டு தொடக்கம் 13ஆம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், 582 மாணவர்களுக்கு 27 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவதாகவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் நோக்கில், ஊவா மாகாண ஆளுநர் குறித்த பாடசாலைக்குக் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு, அங்கு காணப்படும் ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பில் அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களுடன் விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னர், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் விடுதியையும் கூடிய விரைவில் பாவனைக்கு உகந்த முறையில் சீர்செய்து மீட்டெடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.