2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

‘ஜனாதிபதியின் வாழ்த்து உத்வேகத்தைத் தருகின்றது’

Kogilavani   / 2017 ஜூலை 04 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 “அமைச்சர் பழனி திகாம்பரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  வாழ்த்தியமையானது, எமக்கு உத்வேகத்தை அளிக்கின்றது” என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.   

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைவாக, 15 மில்லியன் ரூபாய் ரூபாய் நிதியொதுக்கீட்டில், ஹட்டன், புல்பேங் தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 15 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,  

“ஹட்டன், ஹைலன்ட்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் திகாம்பரத்தை தனது நண்பர் என்றும், அவர் இந்தப் பிரதேசத்துக்கும் நாட்டுக்கும் சிறந்த சேவையாற்றி வருகின்றார் என்றும் புகழ்ந்து கூறினார்.  

“மலையக மக்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றிவரும் அமைச்சர் திகாம்பரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டியமையானது, பெருமையளிக்கின்றது.   மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற தனி வீட்டுத்திட்டங்களின் ஊடாக, எமது தொழிலாளர் குடும்பங்கள், இலட்சாதிபதிகளாக மாறுகின்ற நிலைமை, இந்த நல்லாட்சி அரசாங்கத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.   

“ஹட்டன் நகருக்கு மிகவும் அருகிலுள்ள தொப்பித் தோட்டம் அல்லது புல்பேங் என்றழைக்கப்படுகின்ற இந்தத் தோட்டத்தில், எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை.   

“இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள், தற்காலிக குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டே அமைச்சர் திகாம்பரம், இந்தத் தோட்டத்தில் தனி வீட்டுத்திட்டத்துக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.  

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்காகவே, ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், அந்தக் கல்லூரியில் இன்று தொப்பித் தோட்டம் போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை.  இந்தக் கல்லூரியில் அனுமதிக் கிடைக்காத காரணத்தினால், மேற்படி தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், பல மைல்களுக்கும் அப்பாலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

“ஹைலன்ட்ஸ் கல்லூரியில் வெளி பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களே பெரும்பாலும் கல்விக் கற்று வருகின்றனர். எனவே, இந்தக் கல்லூரியில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை, புல்பேங்  போன்ற தோட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்க கல்லூரி நிர்வாகம் முன்வர வேண்டும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .