2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தெஹியோவிட்ட ஆலயத்தின் பிரச்சினையை தீர்க்கவும்

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை மாவட்டம், தெஹியோவிட்ட நகரத்தில் அமைந்துள்ள முருகப் பெருமான் ஆலய பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டுமென இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் கோரப்பட்டுள்ளது.

தெஹியோவிட்ட பிரதேச வாழ் இந்து மக்கள், விவேகானந்தா நற்பணி மன்ற தலைவர் வி.எஸ்.ராஜா மற்றும் ஆலய மீட்புக்குழு தலைவர் வி.ஆனந்த குமார் ஆகியோர் இணைந்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'மேற்படி நகரத்தில் அரசாங்கத்தினால் 99 வருட குத்தகைக்கு இந்துக்களுக்காக வழங்கப்பட்ட காணியில், சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பாக பொதுமக்களின் உதவியுடன் சிறிய முருகன் ஆலயம் கட்டப்பட்டது.  இந்த ஆலயத்தை 7 ஆண்டுகளாக, குறிப்பிட்ட ஒரு குழுவானது பூசாரி ஒருவரின் துணையுடன் உரிமை கொண்டாடி வருகின்றது.

இக்கோயில் தற்போது எவ்வித அபிவிருத்தியும் இன்றி அனுதினமும்  பிரச்சினைக்குரிய இடமாக காணப்படுகின்றது. இதனை கருத்திற்கொண்ட பிரதேச மக்கள், ஆலயத்துக்கென புதிய நிர்வாக சபையை ஏற்படுத்த முயன்றபோதும் பூசாரி குறுக்கிட்டதுடன் தனக்கு 50 இலட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு பின்னர் ஆலயத்தை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு கூறியதால் பிரச்சினை பெரிதாகியது.

இவ்விடயம் தொடர்பாக இந்து சமய திணைக்கள முன்னாள் பணிப்பாளர் மற்றும் தற்போதைய பணிப்பாளர்களிடம் நேரடியாகச் சென்று முறையிட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, இது தொடர்பாக தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தின் அரசாங்க அதிபர் லெனரோலின் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இவ்விடயத்தை வெளிக்கொணர்ந்ததால் ஆத்திரமடைந்த கோயில் பூசாரி, எமக்கெதிராக அவிசாவளை பொலிஸில் 5 முறை பொய்முறைப்பாடுகளை செய்து, எம்மை அசௌகரியத்துக்கு உள்ளாக்கினார். இந்த ஆலய சர்ச்சையினால் மாணவர்களின் அறநெறிக் கல்விப் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இங்கு வாழும் இந்துக்கள் பலர் மதமாறிகொண்டிருக்கின்றனர்.

எனவே, இவ்விடயத்தை கருத்திற்கொண்டு, இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என மேற்படி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .