எம். செல்வராஜா
மொனராகலை மாவட்டத்தின் மெதகமை கல்வி வலயத்தில் அமைந்துள்ள தெகிகலை தமிழ் வித்தியாலயத்தை மூடிவிடாமல், வித்தியாலயத்தில் நிலவும் அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து, தரம் 8 வரையில் வகுப்புக்களை ஆரம்பித்து, செயல்படுத்தும்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார், ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
'ஊவா மாகாணத்திலேயே, மிகவும் பின் தங்கிய பாடசாலையாக இந்த வித்தியாலயம் காணப்படுகின்றது. இப்பாடசாலையில் தரம் 1 முதல் ஆண்டு 7 வரையிலான வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. 31 மாணவர்கள் கல்விக் கற்று வருகின்றனர். அதிபர் உள்ளிட்டு 5 ஆசிரியர்கள் கடமையிலுள்ளனர்.
இப்பாடசாலையை சூழவுள்ள பிரதேசமும் பின் தங்கிய நிலையில் காணப்படுவதால், அப்பிரதேச மக்கள் பொருளாதார நெருக்கடிக்கடியை பெருமளவில் எதிர்கொள்கின்றனர். இந்நிலையிலும் தம் பிள்ளைகளை கல்வி கற்க இப்பாடசாலைக்கு அனுப்புகின்றனர்.
இப்பாடசாலையில் தரம் எட்டு வரை வகுப்புக்களை ஆரம்பிப்பதுடன், ஆரம்பக் கல்வி பிரிவிற்கு 3 ஆசிரியர்களும், ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு தலா ஒவ்வொரு ஆசிரியராக மூன்று ஆசிரியர்களுமாக, மேலும் ஆறு ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.