2025 மே 02, வெள்ளிக்கிழமை

தேரரின் கணக்கில் இருந்து பணம் மோசடி

Janu   / 2024 ஜூலை 29 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொலைபேசி நிறுவனமொன்றின் பணியாளர்கள் என கூறி பதுளையில் உள்ள விகாரைக்கு வந்த இரு இளைஞர்கள் குறித்த விகாரையின் தேரரின் கைத்தொலைபேசியில் உள்ள சிம்கார்டை திருடி தேரரின் வங்கி கணக்கில் இருந்து ஆறரை லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.  

இது தொடர்பாக தெரியவருவதாவது , 

வங்கியில் இருந்து என கூறி தேரருக்கு அண்மையில் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அதில் , கணக்கு தொடர்பான உயர்த்தப்பட்ட VAT கட்டணத்தை குறைக்க அரசு உத்தரவு பெற்றுள்ளதால், வங்கி கணக்கு விவரங்களை வழங்குமாறு கேட்டுள்ளனர் . அப்போது தேரர் தனது அனைத்து வங்கி விவரங்களையும் வழங்கியுள்ளார் . 

சில நாட்கள் கழித்து விகாரைக்கு வந்த இனந்தெரியாத இரு இளைஞர்கள் கைத்தொலைபேசியில் ஏதேனும் பிரச்சனையா என்று கேட்டுள்ளனர். அப்போது தொலைபேசியில் அழைப்பு விடுக்கும் போதெல்லாம் வித்தியாசமான சத்தம் கேட்பதால் அதை இளைஞர்களிடம் கூறி தொலைபேசியை கொடுத்துள்ளார் .  

அதற்கமைய தொலைபேசியை சரி செய்து கொண்டிருந்த சந்தேக நபர்கள், எங்கள் நிறுவனத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்ப வேண்டும் என கூறி தொலைபேசியை பெற்றுள்ளதுடன் பின்னர் தேரரிடம் அதை மீள் கொடுத்து விட்டு மிக்க நன்றி என்று கூறி விகாரையை விட்டு வெளியேறி சென்றுள்ளனர் . 

சிறிது நேரம் கழித்து குறித்த தேரர் அழைப்பொன்றை எடுக்க முயன்றபோது, ​​தொலைபேசி வேலை செய்யாததால் சோதனையிட்டு பார்த்த போது , சிம் கார்டு இல்லாதது தெரியவந்தது. 

சிம் கார்டுகள் சில மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் சந்தேகம் அடைந்த தேரர் தனது வங்கிக் கணக்குகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்வதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார் . அப்போது அவரது கணக்கில் இருந்த ஆறரை லட்சம் ரூபாய் பணம் எடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.

 அதனையடுத்து இது தொடர்பில் குறித்த தேரர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதுடன் தொலைபேசி மற்றும் திருடப்பட்ட சிம் கார்டு ஊடாக பெறப்பட்ட வங்கி விபரங்களை பயன்படுத்தி இந்த பணம் எடுத்திருக்கலாம் எனவும் சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் , குறித்த தேரர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவரின் சத்திரசிகிச்சைக்காக இந்தப் பணத்தை சேமித்ததாகவும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X