2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பம்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 16 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

மாகாண சபைத் தேர்தல்களை 2022ல் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும்
மேற்கொண்டு, தயார் நிலையிலிருக்குமாறு தேர்தல் ஆணையாளர், தம்மிடம்
கேட்டுள்ளாரென்று, பதுளை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இந்திக்க ஹத்துருசிங்க
குறிப்பிட்டார்.

பதுளை மாவட்ட தேர்தல் திணைக்கள கேட்போர் கூடத்தில், நேற்று (15) நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் 'தேர்தல்களைப் பற்றியும், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் செயற்படும் விதம் குறித்தும் வாக்காளர்களாகிய மக்கள் பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர்.

அதனால் அவர்கள் தேர்தல்களைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளையும் பல்வேறு வகைகளில்
முன்னெடுக்கின்றனர். இப் புறக்கணிப்பினை தடுக்கும் வகையிலும், வாக்களிப்பில் ஈடுபட
வேண்டியது தமது தலையாய கடமையென்பதையும் மக்களுக்கு தெளிவுப்படுத்தும்,
விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் தேர்தல் திணைக்களம் என்ற வகையில்
வெற்றிகரமாக நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் பிரதிபலனாக கடந்த தேர்தல்களில் வாக்காளர்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்த நிலையில் இருந்து வருகின்றது. விடயமொன்றினை மக்கள் மயப்படுத்துவதற்கும், சமூக மயப்படுத்துவதற்கும், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கும் ஊடகவியலாளர்களின் பங்கு மகத்தானதாகும். தேர்தல் திணைக்கள வேலைத்திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியவர்கள் ஊடகவியலாளர்களேயாவர்.

வாக்காளர்களாகிய மக்களுக்கு, அவர்களின் விரக்தி நிலையினைப் போக்கி, அவர்களது
வாக்குரிமையை பயன்படுத்துமாறு கோரும் வகையில், வீதி நாடகம், தெளிவுப்படுத்தல்,
துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது, செயலமர்வுகள் நடாத்துதல் போன்ற இன்னோரன்ன
விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

ஊடகவியலாளர்களும் எமது வேலைத்திட்டங்களுக்கு பூரண பங்களிப்புக்களை வழங்க
வேண்டும். அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு, அனைத்து ஏற்பாடுகளையும், மேற்கொண்டிருக்கின்றோம். தேர்தல் ஆணையகம் குறிப்பிடும் திகதியில் தேர்தலை நடாத்த தயாராகவுள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X