2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களை மூன்றாக மாற்ற வேண்டும்

R.Maheshwary   / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

அரசாங்கத்தின் புதிய கல்வித்திட்டத்துக்கு அமைய நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் இரண்டு கல்வி வலயங்களை மூன்று கல்வி வலயங்களாக மாற்றுவதுடன், தகைமையுள்ள ஆசிரியர்களை வலயம் மற்றும் கோட்டக்கல்வி அலுவலகங்ளில் நிர்வாக சேவைகளுக்கு தெரிவு செய்ய வேண்டுமென்று, கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் கோரியுள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சரால் மத்திய மாகாண ஆளுனர் லலித் யு. கமகேவுக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றிலேயே, மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நுவரெலியா பிரதேச பாடசாலைகள் ஒரு கல்வி வலயமாகவும், தலவாக்கலை, ஹட்டன் பிரதேசங்களுக்கு ஒரு கல்வி வலயமாகவும், நோர்வூட் பிரதேசத்திற்கு ஒரு கல்வி வலயமாகவும் மூன்று கல்வி வலயங்கள் அமைய வேண்டும்.

நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும், உரிய வகையில் தமிழ்க் கல்வித்துறைக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. புதிய கல்வித்திட்டத்திற்கமைய தமிழ்க் கல்வித் துறைக்கு முன்னேற்றகரமான மாற்றத்தினை ஏற்படுத்தியேயாக வேண்டும் அதற்கான தருணம் தற்போது கிடைத்துள்ளது.

இம் மாவட்டத்தின் தமிழ்க் கல்வித் துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து திருப்திப் பட முடியாது. ஜனாதிபதி தனக்கு கல்வி இராஜாங்க அமைச்சினை வழங்கும் போது பெருந்தோட்டப்பகுதி தமிழ் பாடசாலைகளின் மேம்பாடுகள் விடயமாக கூடிய கவனம் செலுத்தப்படல் வேண்டுமென்று தனக்கு அறிவுறுத்தல் கொடுத்ததையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.

தமிழ்க் கல்விப் பணிப்பாளர்களாக கடமையாற்றக் கூடிய தகுதியுள்ளவர்கள் பலர் இருந்து வருகின்றனர். இத்தகையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு அப் பதவிகள் வழங்கப்படல் வேண்டும்.

இவ்வகையில் நுவரெலியாவில் அறுவர், ஹட்டனில் எட்டு பேர், கொத்மலையில் மூன்று பேர், வலப்பனையில் ஓருவர் என்றடிப்படையில் தகைமையுள்ளவர்கள் உள்ளனர். இவர்களை வலயம் மற்றும் கோட்டக் கல்வி என்ற ரீதியில் கல்வி நிர்வாக சேவைக்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கும் என தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .