R.Maheshwary / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டு மக்களுடைய வயிற்றுப் பசியை தீர்த்து வைக்க அரசாங்கம் தவறியுள்ளது என தெரிவித்த, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், இதனால் முக்கியமாக பெருந்தோட்ட மலையக மக்கள் இன்னோரன்ன பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.
நேற்று (25) அப்புத்தளை- காகல்ல தோட்ட மக்களின் நீண்டநாள் தேவைப்பாடாக இருந்த, பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட சந்தர்ப்பத்தில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் வர்த்தமானி என்ற நாடகம் இன்றளவும் முடிவில்லா நாடகமாக அரங்கேற்றப்பட்ட கொண்டே இருக்கின்றது. இதனிடையே குறுகிய காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மிக மிக வேகமாக மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் போக்குவரத்து வாகனங்களின் கட்டணமும் அதிகரித்துள்ளது. மேலும் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு வெடிப்பு சம்பவங்களினாளும் மக்கள் பாரியதொரு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
பெருந்தோட்ட மலையக மக்கள் இந்த நாட்டினுடைய மிக முக்கிய பொருளாதார பங்குதாரராக இருந்த போதிலும், சொற்ப வருமானத்தையே அவர்கள் பெறுகின்றார்கள். ஆயிரம் ரூபாய் வர்த்தமானிக்கு பின்னர் பெருந்தோட்ட நிர்வாகங்களின் தன்னிச்சையான செயல்பாடுகளினால் அவர்களுடைய வேலைநாள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக பல அடாவடி செயற்பாடுகள் பெருந்தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்கின்றன.
தொழில் பிணக்குகள் பொலிஸ் நிலையம் வரை சென்று தீர்க்க வேண்டியது ஒரு சூழ்நிலையில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மக்கள் சார்பாக முன்நின்று பல பிரச்சினைகளை கடந்த காலங்களில் தீர்த்து வைத்திருந்தது நாம் அனைவரும் அறிவோம்.
கடந்த வரவு-செலவுத் திட்ட பாராளுமன்ற அமர்வின்போது மும்மொழிகளிலும் பல சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட மலையக மக்களின் பிரச்சனை அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக
தன்னால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், செவிடன் காதில் ஊதிய சங்காகவே அது இருந்தது என்பது மிகவும் வேதனையான விடயமாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .