2025 மே 05, திங்கட்கிழமை

‘பெருந்தோட்டத்தினரும் இலங்கையர்களே’

Gavitha   / 2020 நவம்பர் 22 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே, கூட்டு ஒப்பந்தம் அமுலில் உள்ளேதே தவிர, தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை கிறிலஸ்பாம், கே.ஜி.கே ஆகிய தோட்டங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகளை புனரமைப்பு செய்வதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று (22) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கியபோது உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள அனைவரும் பிரிந்து நின்றால், அது, கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்து விடும் என்றும் எனவே, தொழிலாளர்களின் நன்மைகளுக்காக, தொழிற்சங்க ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகள் புனரமைக்கப்படும் என, நாடாளுமன்றத் தேர்தலின்போது தான் உறுதியளித்ததாகவும் அந்த உறுதிமொழி, தற்போது நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்து, ஊடகங்களின் முன்னிலையில் வீராப்புபேசும் அரசியல் கலாசாரத்தை தான் பின்பற்றவில்லை என்றும் ஒரு அரசியல்வாதியாக அல்லாமல், மக்களுக்குச் சேவையாற்றும் சிறந்த நிர்வாகியாகவே தான் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, “என்னை வேலை செய்ய விடுங்கள், மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும்” என்று அவர் கூறினார்.

வரவு – செலவுத்திட்டத்தில், பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவொரு ஒதுக்கீடும் இல்லை என, முன்னாள் அமைச்சர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார் என்பதைக் குறிப்பிட்ட அவர், “பெருந்தோட்ட மக்கள் என்பவர்களும் இலங்கையர்களே; அவர்கள் தனித்துவிடப்பட்டவர்கள் அல்ல” என்றும் தெரிவித்தார்.

எனவே, ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே வரவு - செலவுத்திட்டத்தில் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஆயிரம் ரூபா சம்பளம், மலையக பல்கலைக்கழகம், நுவரெலியா மாவட்டத்தில் மும்மொழி தேசிய பாடசாலை போன்ற நல்ல திட்டங்கள் பட்ஜட்டில் இருந்தும், எதிரணியிலுள்ள மலையக அரசியல்வாதிகள்,  அதை ஆதரித்து வாக்களிக்கவில்லை என்று தெரிவித்த அவர், இதன்மூலம் மக்களைவிடவும் அவர்களுக்கு அரசியலே முக்கியம் என்பது உறுதியாகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

“இதேவேளை, கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் தவறான கருத்துகள் பரப்பட்டுவருகின்றன. உண்மையில் கூட்டு ஒப்பந்தமானது,  தொழிலாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அல்ல. மாறாக கம்பனிகளைக் கட்டுப்படுத்துவதற்காகவே அமுலில் உள்ளது” என்றும் இதன்போது அவர் மேலும் கூறினார்.

ஆயிரம் ரூபாய்க்கான யோசனை வந்துள்ள நிலையில், தற்போது அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாய் வேண்டும் என்று கூறுகின்றனர் என்றும் ஆனால் உண்மை எது என்பது மக்களுக்குத் தெரியும் அவர் தெரிவித்தார்.

“கட்சி ரீதியாக சிலர் பிரிந்திருக்கலாம். சிலர் நடுநிலையாக இருக்கலாம். ஆனால், தொழிற்சங்க ரீதியில் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அப்போதுதான் கம்பனிகளுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நாம் பிரிந்துநின்றால் அது கம்பனிகளுக்கே நன்மையாக அமைந்துவிடும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X