2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

மலையக அரசியல் அவலத்தை மாற்றியமைக்க வேண்டும்

Freelancer   / 2022 பெப்ரவரி 19 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலன் பாலன்

மக்களை கொத்தடிமைகளாக்க முனையும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் மலையக அரசியல் அவலத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

உரிமை அரசியலை மீட்டு எடுக்க வேண்டும் என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மத்துகம நகரில், துளிர்கவி சுபானி எழுதிய ‘மெய்யொசை’ நூல் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும போதே மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

மலையகத் தமிழ் மக்களுக்கு ஆயிரம் உரிமைப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஏற்கனவே அமைச்சரவை அனுமதித்து வர்த்தமானி பிரகடனம் செய்யப்பட்ட நுவரெலிய பிரதேச செயலகம் விடயத்தை நடைமுறைப் படுத்துவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. 

ஆயிரம் ரூபா சம்பள விடயத்திலும் நிலைமை இதேதான். அந்த ஆயிரம் ரூபா விடயத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தையும் வர்த்தமானி பிரகடனத்தையும் உரிய முறையில் நடைமுறைப்படுத்தி 2021 ஜனவரி அரச ஆணையின்படி  நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா கிடைப்பதை உறுதி செய்தால், அந்த பணத்தில்  கோதுமை ரொட்டியை  உண்பதா ? கோழியை உண்பதா என்பதை மக்கள் முடிவு செய்து கொள்வார்கள். 

அதைவிடுத்து 2022 ஜனவரியில் கோதுமையை சலுகை விலையில் கொடுத்து மக்களை கொத்தடிமைகளாக்க முனையும் அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் மலையக அரசியல் அவலத்தை மாற்றி அமைக்க வேண்டும். 

உரிமை அரசியலை மீட்டு எடுக்க வேண்டும்.

குளிரூட்டிய மண்டபத்தில் கல்வியாளர்களும், இலக்கியவாதிகளும், அரசியல்வாதிகளும், கலைஞர்களும் ஒன்றுகூடி ஒரு நூல் வெளியீட்டு விழாவை மத்துகம நகரில் நடாத்தும் அளவுக்கு முன்னேறி இருக்கும் களுத்துறை மாவட்ட மலையகத் தமிழர் இன்னும் பின்தங்கி இருக்கிறார்கள் என நாமே சொல்வோம் எனில், அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாண சபை உறுப்பினரோ தெரிவாகவில்லை என்பதற்காக களுத்துறை மாவட்டம் கல்வியிலும், கலைத்துறையிலும் காட்டியிருக்கும் முன்னேற்றம் இல்லையென்று ஆகிவிடாது. இன்று ஒரு யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பட்டதாரியாக இளங்கவிஞர் சுபானி தனது முதலாவது கவிதை நூலை வெளியீடு செய்கிறார் என்பது எத்தனைப் பெரிய சாதனை.

எல்லோருக்கும் போல முதல் தொகுதியின் பலவீனங்கள் நூலில் தெரிகின்றன. அதற்கும் அப்பால், களுத்துறை மக்களின் வாழ்வியல் இந்த நூலில் வரவில்லையே என்ற வருத்தமே எனக்கு அதிகமாகிறது. 

மலையக இலக்கியத்தில் தேயிலை வாழ்வியல் பதிவு செய்யப்பட்ட அளவுக்கு பால்மர வாழ்வியல் பதிவு செய்யப்படவில்லை. அதனை பால்மர  வாழ்வியலில் இணைந்து இருக்கும் களுத்முறை மாவட்டத் தமிழ் படைப்பாளிகளே முன்கொண்டு வரவேண்டும்.

சுபானி, ஜோதி , செல் வா கவி போன்றவர்கள் அதனைச் செய்வதற்கு முன்வரவேண்டும். 21 வருடங்களுக்கு முன்னர் மத்துகம நகரில் ஒரு கவியரங்கத்துக்கு தலைமை வகித்து மேற்கே உதிக்கும் சூரியன்கள் என உங்களை வரவேற்று இருந்தேன். இப்போது தான் முதலாவது கவிதை வெளிவருகிறது என்பது பெரும் தாமதம்தான் ஆனாலும் மகிழ்ச்சி. நாம் பல விடயங்களில் தாமதமாகிக் கொண்டு இருக்கிறோம்.

 கோதுமை மா கோரிக்கையை அமைச்சரவைக்கு  சமர்ப்பிக்கும் அவலத்தில் இருந்து மலையக அரசியலை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

எமது மக்களின் ஊதிய உரிமையை உறுதி செய்வதே அரசியல் முன்னெடுப்பாக இருக்க வேண்டுமே தவிர கோதுமையைத் தான் சாப்பிட வேண்டும் என அமைச்சரவைத் தீர்மானிக்க முடியாது. 

இது அடிப்படை உரிமை மீறல் அரசியல் ரீதியாக மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X