2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘மலையகத்தில் பாரபட்சமின்றி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்’

மு.இராமச்சந்திரன்   / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்   

“பெருந்தோட்டங்களில், பாரபட்சமின்றி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, அமைச்சர் திகாம்பரம் உரிய பணிப்புரைகளை வழங்கியுள்ளார். அவரின் பணிப்புரைக்கு அமைவாகவே, அனைத்துத் தோட்டங்களிலும் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்று, மத்திய மாகாணசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.  

மலையகப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கு அமைய, 22 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், கொட்டகலை, பொர்ஸ்கிறிக் தோட்டத்தின் பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

இங்கு மேலும் கூறிய அவர்,  

“கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில், பொரஸ்கிறிக் தோட்டத்தில் எவ்வித அபிவிருத்தியும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர் தேசிய சங்கத்துடன் நீண்டகாலம் தொடர்பிலுள்ளவர்கள்.   

“இம்மக்கள், கொட்டகலை ஓயா ஆற்றைக் கடப்பதற்காகப் பயன்படுத்தி வந்த தொங்கு பாலம், வெள்ளத்தில் அள்ளுண்டு  சென்றது. எனினும், இதுவரை அந்தப் பாலம் புனரமைத்துக் கொடுக்கப்படவில்லை. இதனால், தோட்ட மக்கள் போக்குவரத்துச் செய்வதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.  

“இவ்விடயம், அமைச்சர் திகாம்பரத்தின் கவனத்துக்குக் கொண்டுச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தோட்டத்தில் புதிய பாலத்தை அமைப்பதற்காக, 22 இலட்சம் ரூபாய் நிதியை, ஒதுக்கீடு செய்துள்ளார்.  இந்த நிதியைக் கொண்டு, வெகுவிரைவில் புதிய  பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என்றார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .