2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

லக்கம் வித்தியாலய விஞ்ஞானக் கல்விக்கு உதவி

Editorial   / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஸ்ரீ சண்முகநாதன்

மாணவர்கள் உயர்தரத்தில், விஞ்ஞான பிரிவில், சிறப்பு சித்திகளைப் பெறுவதன் ஊடாக, இந்தியாவில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களையும், தகுந்த தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலத்தில் க.பொ.த. உயர் தரத்தில் மாணவர்கள் கல்வி கற்று, சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு, “அபிவிருத்திக்கான வலுவூட்டல்” நிறுவனத்தின் ஊடாக, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக, அதன் முகாமையாளர் கந்தையா விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“அபிவிருத்திக்கான வலுவூட்டல்” நிறுவனத்தின், “முதல்வன்” சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில், தலைமை வகித்துப் பேசும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், கண்டி இந்திய உதவித் தூதுவர் திரேந்திரசிங் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

அவர் மேலும் கூறுகையில், “மலையக மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரத்தில், கடந்த ஆண்டில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளார்கள். அதேபோல், கடந்த ஆண்டில், க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களில், 500 க்கும் மேற்பட்டோர், பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பெற்று வருகின்றார்கள். எனினும், விஞ்ஞான பிரிவில் உயர் கல்வி பெறுவோரின் தொகை, குறைவாகவே காணப்படுகின்றது. அதற்கு, உயர் வகுப்புகளில் விஞ்ஞானம் கற்பிப்பதற்குத் தேவையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதும் ஒரு காரணமாகும்.

“இந்திய அரசாங்கம், இலங்கையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இந்திய வம்சாவளி பெருந்தோட்ட மாணவர்களுக்கு, புலமைப் பரிசில் வழங்கி வருகின்றது. அதேபோல், இந்தியாவில் உயர்கல்வியை மேற்கொள்வதற்கும், புலமைப் பரிசில் தரப்பட்டு வருகின்றது. ஆனால், இந்தப் புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள், விஞ்ஞான பிரிவில் சிறப்பு சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். எனவே, மலையக மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. மேலும் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்றிருந்தால்தான் வைத்தியராகவோ, பொறியியலாளராகவோ வர முடியும்.

“எனவே, மஸ்கெலியா லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில், க.பொ.த. உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள், விஞ்ஞான பிரிவில் கல்வியைத் தொடர்வதற்கும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கும், எமது ‘அபிவிருத்திக்கான வலுவூட்டல்’ நிறுவனத்தின் ஊடாக, தேவையான உதைவிகளை வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றேன்.

நான் இந்த வித்தியாலயத்தின் பழைய மாணவன் என்ற முறையில், நான் கல்வி கற்ற பாடசாலையின், மேம்பாட்டுக்கு உதவ வேண்டிய பொறுப்பும், கடமையும் எனக்கு இருகின்றது. ‘அபிவிருத்திக்கான வலுவூட்டல்’ நிறுவனத்தின் முகாமையாளராக இருப்பதால், அதற்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது. எனவே, லக்கம் தமிழ் மகா வித்தியாலயத்தில், விஞ்ஞான பிரிவை ஆரம்பிக்கவும், தேவையான ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்களுக்கான வேதனங்கள் உட்பட தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருக்கின்றேன்.

“அதற்கான வேண்டுகோளை, பாடசாலை நிர்வாகத்திடம் விடுத்துள்ளேன். மாணவர்கள் புலமைப் பரிசில் பெற்று, இந்தியா முதலான வெளிநாடுகளில், உயர் கல்வியைத் ​தொடர வேண்டும், அதன் ஊடாக சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்று மலையக சமூகத்துக்கு பெருமையை தேடித்தர வேண்டும். அதை உதாரணமாகக் கொண்டு, எதிர்கால மாணவர்களும் உற்சாகத்துடன் கல்வி கற்கக் கூடிய நிலை உருவாக வேண்டும். எனவே, கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பாடசாலை நிர்வாகமும், மாணவர்கள் மற்றும் பெற்றோரும், தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X