2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ‘வீதிக்கு இறங்குவோம்’

Editorial   / 2018 மே 25 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இல்லையெனில் மக்களோடு வீதிக்கு இறங்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான, அரசால் நிர்வகிக்கப்படுகின்ற பெரும்பாலான பெருந்தோட்டங்கள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் காணப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பெருந்தோட்டங்களை, அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, எல்கடுவ பிளான்டேஷன் நிறுவனம் ஆகியன நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்நிறுவனங்கள் கடந்த காலம் முழுவதும், அரசியல் மயமாக்கப்பட்ட ஊழல் மிக்க நிறுவனங்களாகவே செயற்பட்டு வந்தனவெனச் சாடிய அவர், நாடாளுமன்ற கோப் குழுவிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்திலும், இந்நிறுவங்களின் செயற்பாடுகளில் எந்த மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், வழமைபோல ஊழல் மிக்க செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் விமர்சித்தார்.

“குறிப்பாக, மேற்படி அரச பெருந்தோட்டங்களிலுள்ள காணிகள் வெளியாருக்கு விற்கப்படுகின்ற, முறையற்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை நிறுத்தி, அரச பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். இல்லையெனில் மக்களோடு வீதிக்கு இறங்க நேரிடும்” என்று அவர் மேலும் கூறினார்.

அவர் மேலும், “மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் தொடர்பாக, பிரதமரின் தலைமையிலே எமது பங்குபற்றலோடு குழுவொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்தக் குழுவின் சிபாரிசுக்கு அமையவே, அரச பெருந்தோட்டங்களின் மீள் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அக்குழு, செயற்பாடற்றதாக இருக்கின்றது. அது தொடர்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்களின் கவனமும் ஈடுபாடும் திருப்தியானதாக இல்லை.

“இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அரச பெருந்தோட்ட நிறுவனங்கள், தான்தோன்றித்தனமாகத் தமது செயற்பாடுகளை முன்னெடுக்கப் பார்க்கின்றன. இது, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X