2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

தேசிய பாடசாலைக்கு போதிய நிதி ஒதுக்க மாகாணசபை உறுப்பினரை பெற்றுத் தாருங்கள்: பிரபா

A.P.Mathan   / 2014 ஜனவரி 27 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேசிய பாடசாலைகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களால் மட்டுமே நிதி ஒதுக்க முடியும். இருப்பினும் எனது நிதி ஒதுக்கீட்டில் 95 சதவீதமான நிதி மாகாண பாடசாலைகளுக்கே செலவழிக்கப்படுகின்றது. எனக்கு மாகாணசபை உறுப்பினர்களை பெற்றுக் கொடுப்பீர்களானால் எனது முழு பன்முகப்படுத்தப்பட்ட நிதியையும் தேசிய பாடசாலைகளுக்கு வழங்குவேன் என கொழும்பு பம்பலப்பிட்டி இந்து கல்லூரிக்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பெறப்பட்ட இசைக்கருவிகளை பாடசாலையின் அதிபர் ஐ.இராசரத்தினத்திடம் கையளித்து உரையாற்றும் போது ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் தனது உரையில்,
 
கொழும்பில் இருக்கும் மூன்று தேசிய பாடசாலைகளுக்கும் என்னால் போதிய நிதியை ஒதுக்க முடியாமல் இருக்கின்றது. காரணம் கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் ஏனைய 43 மாகாணசபை பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்க வேண்டி இருக்கின்றது. கொழும்பு மாவட்டத்தில் இருக்கும் மேல்மாகாணசபை உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தியைப் பற்றி சிந்திப்பதில்லை. அவர்கள் அனைவருக்கும் கடந்த ஐந்து வருடங்களில் கிடைத்த 6 கோடியே 75 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் சுமார் 30 இலட்சம் ரூபாவையே தமிழ் கல்விக்காக ஒதுக்கியிருக்கின்றார்கள். இவர்களது பன்முகப்படுத்த பட்ட நிதி ஒதுக்கீட்டு பட்டியல் என்னிடம் இருக்கின்றது. என்னால் பட்டியலை வெளியிட முடியும். இந்த முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் பாடசாலை அபிவிருத்தி சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாநகரசபை உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தன்தமது கடமைகளை செய்யாமல் வெறுமனே ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதும் உணர்ச்சி ததும்பும் வசனங்களை ஊடக அறிக்கையில் வெளியிடுவதில் தான் தனது நேரத்தை செலவிடுகின்றனர்.
 
ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவும் இல்லை. பாடசாலைகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுப்பதற்கான நிதியினை முதலமைச்சரிடமிருந்து பெற்றுக் கொடுக்க முயற்சி கூட எடுக்கவில்லை. தளபாடங்களை வாங்கி கொடுத்ததும் இல்லை. மாறாக முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் கொடுப்பதிலும் சுயதொழில் என்ற போர்வையில் 10, 20 பேருக்கு தையல் இயந்திரம் வழங்குவதிலும், கூரைத்தகடுகள், கேஸ்குக்கர்களை வழங்கி அவற்றை படம் பிடித்து ஊடகங்களில் விளம்பரம் தேடுவதில் தான் அக்கறை செலுத்தினார்கள். 
 
இதனால் தான் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் எனது கட்சியை சார்ந்த மாகாணசபை உறுப்பினரை எனக்கு பெற்றுக் கொடுப்பீர்களேயானால் முதலமைச்சர் மூலமாக வருடத்தில் பல கோடி ரூபாய்களை தமிழ் கல்வி சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க முடியும். அதேபோல் எனது நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டை உங்களைப் போன்ற தேசிய பாடசாலைகள் மூன்றுக்கும் முழுமையாக வழங்க முடியும். இங்கே கலந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தான் எமது சமூகத்தை வழிநடத்துபவர்கள். ஆகவே நீங்கள் தான் எனது இந்த செய்தியை பெற்றோர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.
 
மேலும் இவ்வைபவத்தில் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பழைய மாணவ சங்க  உப தலைவர் கு.சுரேந்திரன் கல்வி நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருதிவிராஜ், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் எல்.குருநாதன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X