2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

மதில் விழுந்ததில் மாணவன் காயம்

Editorial   / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டின் மதில் இடிந்து பாடசாலைக்குள் விழுந்ததில் பத்து வயதான மாணவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று மஹகமவில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மாணவன், களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

விஜேராம சந்தியில், மஹரகம ஜனாதிபதி ஆரம்பப் பாடசாலைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற எல்லைச் சுவர் , திங்கட்கிழமை (16) பிற்பகல்  12.30 மணியளவில் இடிந்து வீழ்ந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த பாடசாலையில் 4ஆம் ஆண்டில் கல்வி கற்கும் பத்து வயது மாணவனின் கால், இரண்டு கைகள் மற்றும் உடலின் பல பாகங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை சாதாரணமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மஹரகம விஜேராம சந்திக்கு அருகில் உள்ள பிரபல பாடகர் ஒருவரின் வீடொன்றின் நாற்பது அடி நீளமான பாதுகாப்பற்ற சுவர் இடிந்து வீழ்ந்துள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் நாற்பது அடி நீளமும், பதினைந்து அடி உயரமும் உள்ள மதில், கொங்கிரீட் பீம், லிண்டல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது  என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த விபத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை அமைப்பும், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறை அமைப்பும் முற்றாக சேதமடைந்துள்ளன.

மூன்று மாணவர்கள் கழிவறையை பயன்படுத்திக் கொண்டிருந்த போது திடீரென பதினைந்து அடி உயர சுவர் மாணவனின் மீது விழுந்தது.

விபத்தின் பின்னர் ஆசிரியர் ஊழியர்களும் பெற்றோரும் சேர்ந்து மாணவனை  மீட்டு சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து இடைவேளையின் போது இடம்பெற்றிருந்தால் அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருக்கும் என  அந்த பாடசாலையின் அதிபர்  சரத் அதிகாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சு அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் பின்னர், மஹரகம பிரதேச செயலாளர் திருமதி தில்ருக்ஷி வல்பொல மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்கள் பாடசாலைக்கு களவிஜயம் ​மேற்கொண்டனர்.

அத்துடன்,  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X