Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Super User / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயகம்)
கிறீஸ் பூதம் என்ற தோற்றப்பாட்டினை தொடர்ந்து நாவாந்துறையில் இராணுவத்தினரும் பொலிஸாரும், அப்பகுதி வாழ் மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட 22 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை ஒக்டோபர் 27 ஆம் திகதிக்கு நீதிபதிகள் நேற்று வியாழக்கிழமை ஒத்திவைத்தனர் .
நீதிபதிகளான என்.ஸி. அமரதுங்க, எஸ்.ஐ.இமாம் பிரிசெத் டெப் ஆகியோர் நீதிபதிகள் குழாமில் இருந்தனர்.
இருதயநாதன் வீனஸ் றெஜி மற்றும் வில்பிரட் அப்பா ஹில்டா ஆகியோர் உட்பட 22 பேர் சட்டத்தரணி மோஹான் பாலேந்திரா மூலம் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவ தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பெண் பொலிஸ் அதிகாரி நதீகா, சட்ட மா அதிபர் உட்பட 12பேர் பிரதிவாதிகளாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
கிறீஸ் பூதம் என குறிப்பிடப்படும் இனந்தெரியாதவர்களினால் வடக்கிலும், இலங்கையின் வேறு பிரதேசங்களிலும் சாதாரண மக்கள் தாக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இது மக்கள் மத்தியில் பயப் பிராந்தியை தோற்றுவித்துள்ளது. இதன் விளைவாக இராணுவத்தினரும் பொலிஸாரும் பல நபர்களை கைது செய்துள்ளனர்.
அரசாங்க அதிகாரிகள், கிறீஸ் பூதம் தொடர்பான செய்திகள் பொய்யானவை என கூறியுள்ளனர். பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளுடன் மக்கள் விளையாடக் கூடாது எனக் கூறியதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
'கிறீஸ் பூதத்தின் தோற்றப்பாட்டுடன் தொடர்புபட்ட நிகழ்ச்சிகளின் பின், தான் ஆகஸ்ட் 22ஆம் திகதி இரவு 9 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு எழுந்ததாகவும் 40 – 50 வரையிலான மக்கள் நாலு சந்தி இரர்ணுவச் சாவடியிலிருந்து நாவாந்துறை சந்தி நோக்கிப் பெரும் ஆரவாரப்பட்டுக்கொண்டு சென்றதாகவும்' மனுதாரர் ஒருவர் மனுவில் கூறியுள்ளார்.
அவரது மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இரவு 11.30 மணியளவில் தனது வீட்டுக் கதவை யாரோ பலமாகத் தட்டி உள்ளேயிருப்போரை வெளியில் வருமாறு அழைத்தாகவும்,
பின்னர் இராணுவத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து என்னையும் தனது சகோதரியின் கணவனையும் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று, இரும்புக் கோல்கள், தடிகளால் தாக்கினர் எனவும்
பின்னர் தம்மை, நாவாந்துறை சந்தை சந்திக்கு கொண்டுவந்து அங்கு ஏற்கனவே இருந்தவர்களுடன் சேர்த்துவிட்டு கண்டபடி தாக்கினர். ஏனைய சிலருடன், தன்னையும் ஜீப்பில் ஏற்றிவிட்டு ஜீப்பிலிருந்து தள்ளிவிட்டனர். பெண் பொலிஸ் கான்ஸ்டபிளான நதீகா, தனது தலையிலும், மார்பிலும், ஆணுறுப்பிலும் சப்பாத்தினால் தாக்கினார் எனவும் கூறியுள்ளார்.
பின்னர், தம்மை பஸ்ஸில் ஏற்றி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டுவந்து சிங்களத்தில் எழுதப்பட்ட ஏதோ ஒரு ஆவணத்தில் கையெழுத்து வாங்கினர். அடுத்த நாள், தம்மை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதாகவும் பின்னர் தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து;ளார்.
'சிங்களத்தில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடச் செய்ததன் மூலம் எனது மொழியுரிமை மறுக்கப்பட்டது. சித்திரவதைக்கு உட்படாமல் இருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமத்துவத்துக்கான உரிமை, சம பாதுகாப்புக்கான உரிமை, எழுந்தமானமாக கைது செய்யப்படாமல் இருக்கும் உரிமை ஆகியன எனக்கு, பிரதிவாதிகளால் மறுக்கப்பட்டன.
இதன்படி, யாப்பின் உறுப்புரை 22(1), 22(2) ஆகியவற்றால் உறுதிசெய்யப்பட்ட மொழியுரிமைகள் எனக்கு மறுக்கப்பட்டுள்ளன' என்று அவர் அந்த மனுவில் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மனுக்களும் ஒரே விதமாக இருப்பதனால் அவற்றை ஒரே நேரத்தில் விசாரிப்பது பொருத்தமெனக் கூறிய நீதிபதிகள் விசாரணையை ஒக்டேபார் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025