2025 மே 19, திங்கட்கிழமை

எமது போராட்டம் இரவு 8 மணிவரை தொடர்ந்தது: கந்தவேல்

A.P.Mathan   / 2012 ஜூலை 11 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது 'நோயாளர் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம்' கடந்த 5ஆம் திகதி நடத்திய உணவு தவிர்ப்புப் போராட்டம் இரவு 8 மணிவரை நீடித்தது என அவ்வியக்கத்தின் உபதலைவர் கந்தவேல் தெரிவித்துள்ளார்.

'நீதிமன்ற உத்தரவினை அடுத்து எமது போராட்டம் மாலை 5 மணியளவில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக வெளியாகிய செய்தி தவறானது. நீதிமன்ற கட்டளை எமது கைக்குக் கிடைத்த பின்னர் இரவு 8 மணியளவிலேயே எமது உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தோம்' என கந்தவேல் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன...

யாழ். வைத்தியசாலை பணிப்பாளருக்கும் மருத்துவ சங்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை சமரசமாக தீர்ப்பதற்கு எடுத்த முயற்சிகள் முற்றுமுழுதாக பயன் தராத நிலையில் - மருத்துவ சங்கத்தினர் முன்னெடுக்கும் பணிப் புறக்கணிப்பு நோயாளருக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் வைத்தியசாலையில் இடம்பெற்ற விசாரணைகளின் முடிவுகளை உடனடியாக வெளியிடுவதையும் வலியுறுத்தி எம்மால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இருபகுதியினரின் ஆதரவுடன் காலை 8.30 மணிமுதல் இரவு 8 மணிவரை எவ்வித இடையூறும் இன்றி முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட திடீர் மரணவிசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயசிறியும் இவ்வுணவு தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். இரண்டு சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஏன் முன்னெடுக்கின்றீர்கள் என இருவரையும் கேட்டனர். எச்சந்தர்ப்பத்திலும் விலகுமாறு கூறவில்லை.

எனது முதுமையையும் நோயினையும் கருத்திற் கொண்டு பணிப்பாளரும் மருத்துவ சங்கத் தலைவரும் நீராகாரமாவது எடுத்துக்கொள்ளுமாறு கோட்டுக்கொண்டனர். ஆனால் நான் அவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

வைத்தியர்களது உடல், உள, சமூக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும், விசாரணைகள் விரைவாக முடிக்கப்படவேண்டும், நோயாளர்களது நலன் பேணப்பட வேண்டும், வைத்தியசாலை நிர்வாக அலகுகள் சீரானமுறையில் இயங்கி, வைத்தியசாலை அபிபிருத்திப் பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்கள் போராட்ட இலக்காக இருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X