2025 மே 19, திங்கட்கிழமை

'யாழ்ப்பாண வாழ்வியல்' பொருட்காட்சி

Super User   / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை யாழ்ப்பாண வாழ்வியல் எனும் தலைப்பிலான பொருட்காட்சியொன்றை நடத்தவுள்ளது.

குறித்த தினங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பல்கலைக்கழகத்தின் கலை பீட வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த பொருட்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்கவும் விசேட அதிதியாக யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் போரசிரியர் வசந்தி அரசரட்ணமும் கலந்துகொள்ளவுள்ளனர்.

குடாநாட்டின் புராதன குடிகள், புராதன குடியிருப்புகள், வாழ்வியல் முறைமைகள், குடிப்பரம்பல் ஆகியவற்றிற்கு இன்றளவில் உள்ள தொல்லியல் சான்றுகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பொருட்காட்சி அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, குடாநாட்டின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் சின்னங்கள் பொருட்களாகவும், மாதிரிகளாகவும், புகைப்படங்களாகவும் கால வரிசை கிரமத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

பல்கலைக்கழக அரும்பொருட் காட்சிச்சாலையில் உள்ள அரிய தொல்லியல்  பொருட்களும் குடாநாட்டின் பல பாகங்களுக்கு நேரில் சென்று பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களும் பொதுமக்களால் மனமுவந்து அன்பளிப்பு செய்யப்பட்ட மற்றும் இரவலாக வழங்கப்பட்ட பொருட்களுடன்  இன்னும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பல பொருட்களும் கண்காட்சியில்; உள்ளடக்கப்படவுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கண்காட்சி நடைபெறும் போது ஆய்வரங்கமும்  நடைபெறவுள்ளது. இதற்கென இந்தியாவிலிருந்து நான்கு தொல்லியல் மற்றும் வரலாற்று அறிஞர்களான பேராசிரியர் இராஜன், பேராசிரியர் செல்வகுமார், பேராசிரியர் அதியமான் மற்றும் கலாநிதி இராஜகோபால் ஆகியோருடன்  இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து 15க்கும் மேற்பட்ட அறிஞர்களும் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

இக்கண்காட்சியினை யாழ். பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையுடன் 'கலைக்கேசரி' இணைந்து ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கண்காட்சி தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதில் பேராதெனியா பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியரான எஸ். பத்மனாதன், யாழ் பல்கலைக்கழக கலை பீடாதிபதி போராசிரியர் குனஞானகுமரன் மற்றும் யாழ். பல்கலைக்கழக வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் புஷ்பரட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது காட்சிப்படுத்தப்படவுள்ள பொருட்கள்:

விவசாயம்: பண்டைக்காலம் முதல் இற்றைவரையிலான நீர்ப்பாசன வடிகாலமைப்பு முறைகள் மற்றும் விவசாயக் கருவிகள்

கட்டடக்கலை: வீட்டுக் கட்டட அமைப்பு முறைகள், ஆலய கட்டட அமைப்பு மற்றும் தேர்ச் சிற்பக் கலாசாரம்

மீன்பிடி: பாரம்பரிய மீன்பிடி முறைமைகளும் அவற்றுடன் தொடர்புபட்ட உபகரணங்களும் கருவிகளும்

கம்மாலைத் தொழில்: அன்றாட இரும்புப் பாவனை பொருட்கள், தொழிற் கருவிகள்

பாரம்பரிய பாவனை பொருட்கள்: வாங்கு, கட்டில், கொக்கைச் சத்தகம், காம்புச் சத்தகம்  துலா, தளபாடங்கள்,  பனம் பொருள்:  பெட்டி, பட்டை, பாய் போன்ற கைப்பணிப் பொருள்கள், உணவுப் பதார்த்தங்கள்

போக்குவரத்து: கடல், தரை, போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்ட  பாரம்பரிய வாகனங்கள், இரட்டை மாட்டு வண்டில், கப்பல், வள்ளங்கள்

சடங்குகள்: பிறப்பு முதல் இறப்பு வரையிலுமான  தனித்துவம் மிக்க சடங்குகள், சம்பிரதாயங்கள்

அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்டவை: கலவோடுகள், நாணயங்கள், மணிகள், சங்குகள், தாளிகள்

அணிகலன்கள்: ஆண் - பெண் இருபாலாரினதும் மோதிரம், சங்கிலி, அட்டியல், பதக்கம், காப்பு, தோடு,

பாரம்பரிய உணவு வகைகள்:  தினையரிசி, வரகரிசி, கூழ், கஞ்சி

கல்வி:  திண்ணைப் பாடசாலை, ஓலைச்சுவடிகள், இசைக்கருவிகள்

மத, மற்றும் ஆலய விழாக்கள்: இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத பண்டிகைகள், கோயில், தேவாலயம்,  மசூதி, திருவிழாக்கள்

மேற்குறித்த விடயங்கள்  பொருட்களாகவோ புகைப்படங்களாகவோ ஓவியங்களாகவோ காட்சிக்கு வைக்கப்படும். அவை யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் முறைமைகளை சித்திரிப்பனவாக அமையும். Pix By: Kithsri De Me


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X