2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'அரசியல் கைதிகளிடம் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது'

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

'சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் எவரும் ஒப்புதல் வாக்குமூலத்தை சுயமாக அளிக்கவில்லை. கட்டாயத்தின் பேரில் வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் பலர் தண்டனை பெற்று சிறைகளில் உள்ளனர்' என அரசியல் கைதியாகவிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளின் உறவினர்கள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்;ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே கோமகன் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாலேயே என்னையும் 6 வருடங்கள் சிறையில் வைத்திருந்தனர். எனினும், என்னிடம் பெற்றப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் கட்டாயத்தின் பேரில் பெறப்பட்டது என அறிந்த வவுனியா நீதிமன்றம், என்னை விடுதலை செய்தது. ஆனால், கொழும்பு நீதிமன்றத்தில் இருந்த எனது வழக்கு, நீண்டகாலமாக முடிவடையாமல் இருந்தது. அங்கு எனது ஒப்புதல் வாக்குமூலத்தை உண்மை என நம்பினர். இறுதியாகவே ஒப்புதல் வாக்குமூலம் உண்மை இல்லையென உணர்ந்து விடுதலை செய்தனர்' என்றார்.

'இவ்வாறே சிறைகளிலுள்ள அரசியல் கைதிகளுக்கும் நடந்தது. முன்னர் தண்டனை பெற்ற அரசியல்கைதிகளின் நீதிமன்ற தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு, ஐ.நா பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

நான் சிறையிலிருந்து, அங்குள்ள அரசியல் கைதிகளின் கனத்த மனச்சுமைகளைத் தாங்கியவாறு வந்துள்ளேன். தமிழர்கள் தலைநிமிர பாடுபட்டவர்கள். இன்று தங்கள் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். ஈழத்தமிழர்கள் தங்களின் விடுதலைக்காக பாடுபடுவார்கள் என அவர்கள் இன்னமும் நம்புகின்றனர்.

தங்கள் உறவுகளை நேசிக்க முடியாமல், தங்கள் பிள்ளைகளை ஆரத்தழுவ முடியாமல் சிறைகளில் வாடுகின்றனர். அவர்களின் குடும்பங்களும் துயரத்தில் வாடுகின்றனர். அவர்களின் விடுதலைக்காக அனைவரும் அணிதிரள வேண்டும்.

அரசியல் கைதிகளுக்கு நியாயமான தீர்வு வேண்டும். அவர்களை விடுதலை செய்ய ஏதாவது ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X