2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க பொலிஸ், இராணுவம், கடற்படை ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு, கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்படுகின்ற பொருட்களை பொலிஸ், இராணுவம், கடற்படை ஆகியன இணைந்து ரோந்து நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

முள்ளிக்குளத்தில் இருந்து தலைமன்னார் வரை இருக்கின்ற அனைத்து படைத்தரப்பினரின் முகாம்களின் ஊடாக கண்காணித்து குறித்த நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும் குறிப்பாக ஏனைய மாவட்டங்களில் உள்ளவாறு மன்னார் மாவட்டத்திலும் சட்டத்தையும் ஒழுங்கையும்  கடைப்பிடிக்கமாறும் உரிய தரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேவன் பிட்டி கிராம மக்களுக்கான விவசாய காணியை வழங்குமாறும் இடம்பெயர்ந்து அகதிகளாக வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்களுக்கு மாதாந்தம் கூட்டங்களை வைத்து அவர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களினால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படுகின்ற அநீதிகளில் இருந்து காப்பாற்ற இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு கடிதம் எழுதுவதற்கும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதனூடாக இந்தியாவுக்கு தெரியப்படுத்துமாறும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் மாவட்ட மீனவர்கள், குறிப்பாக வட மாகாண மீனவர்கள் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து எமது மீனவர்களை பாதுகாக்க எமது அரசாங்க அதிபரை வேண்டியுள்ளோம்.

இவ்விடயம் தொடர்பாக வெளிநாட்டு அமைச்சுக்கு கடிதம் எழுதி இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளை நிறுத்த ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் வாழ்வாதாரம், வீடமைப்பு, பாதைகள் புனரமைப்பு, காணிகள் இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல் போன்ற வேலைத் திட்டங்களுக்கும் உரிய அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்..


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X