2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளைவான் கடத்தியது'

George   / 2016 மார்ச் 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'மானிப்பாய் இராணுவ முகாம் இராணுவ வீரர்களால் பிடிக்கப்பட்ட மாசிலாமணி தியாகராஜா (வயது 37), இராணுவம் விடுவித்த மறுநிமிடம் வெள்ளை வான் மூலம் கடத்தப்பட்டார்' என தாயார் இராஜேஸ்வரி சாட்சியமளித்தார்.

'நாங்கள் வரணியைச் சேர்ந்தவர்கள். எனது மகன் சண்டிலிப்பாயைச் சேர்ந்த பெண்ணொருவரை திருமணம் செய்து அங்கு வசித்து வந்தார். எனது மருமகள் இருதயநோய் காரணமாக இறந்தார். 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சண்டிலிப்பாயிலுள்ள வீட்டில் மனைவியின் ஓராண்டு திதியை எனது மகன் செய்துகொண்டிருந்தபோது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இராணுவத்தினர் எனது மகனைப் பிடித்து, மானிப்பாய் முகாமுக்கு கொண்டு சென்றனர்.

நாங்கள் மானிப்பாய் இராணுவ முகாமுக்கு சென்று அழுததன் பின்னர் மகனை, இராணுவத்தினர் விடுவித்தனர். மகனை அழைத்துக் கொண்டு, முகாமில் இருந்து 50 மீற்றர் தூரம் நடந்துவந்தபோது, வெள்ளைவானில் வந்தவர்கள் எங்களை அடித்து தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றனர்.

இந்தச் சம்பவம் நடந்து 4 வருடங்கள் கழித்து, 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில், தொண்டைமானாறுப் பகுதிக்குச் சென்ற உறவினர் ஒருவர், இராணுவ முகாம் ஒன்றில் பதிவுகளை மேற்கொள்ளும் போது, அந்த இராணுவ முகாமில் இராணுவச் சீருடையுடன் எனது மகனைக் கண்டுள்ளார். எனது மகன் தங்களிடம் வெற்றிலை வாங்கித்தருமாறு கூறி தாங்கள் வாங்கிக் கொடுத்ததாகவும் எனக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நான் அங்கு சென்று பார்த்த போது அங்கு மகன் இருக்கவில்லை.

இது நடந்து, இரண்டு வருடங்கள் கழித்து, நான் கதிர்காமம் சென்றேன். கதிர்காமம் செல்லும் வழியில் வவுனியாவில் ஒரு கடையில் நின்ற போது, அந்தக் கடைக்கு அருகில் வந்த இராணுவ ஜீப் ஒன்றில் இருந்து இராணுவத்தினர் இறங்கி பொருட்கள் வாங்கிச் சென்றனர். எதேச்சையாக ஜீப்பை பார்த்த போது, அதற்குள் இராணுவச் சீருடையுடன் எனது மகன் இருந்தார். நான் மகனை அழைத்த போது, ஜீப் புறப்பட்டுச் சென்றுவிட்டது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X