2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

“இறந்தகாலத்தை மறக்க கூட்டுப்பிரார்த்தனையே சிறந்தது”

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.ஆ.கோகிலவாணி

'கடந்த 30 வருடகால  யுத்தத்தை எதிர்கொண்ட வடக்கு, கிழக்கு மக்கள் மன அமைதியின்றி துயரம் மிகுந்த நெருக்கடிமிக்க சூழலிலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதனை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த நாளன்றே நான் உணர்ந்துகொண்டேன்' என சமர்ப்பண் தியான நிலையத்தின் ஸ்தாபகர் சிவகிருபாணந்த சுவாமி தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிவ கிருபாணந்த சுவாமியின் சமர்ப்பண் தியான நிகழ்வு, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றியப் பின் ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'சிங்கப்பூர், கனடா, லண்டன், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டிருந்தப் போதிலும் இலங்கைக்கு வருவதற்கு 17 வருடங்கள் தேவைப்பட்டது' எனக் கூறிய அவர், 'அந்நாடுகளில் எதிர்கொண்ட அனுபவத்தைவிட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகுந்த எதிர்மாறான தருணத்தை உணர்ந்தேன்' என்றார்.

'யுத்தம் காரணமாக உறவுகள், உடமைகளை இழந்த மக்கள் நிம்மதியற்று வாழ்கின்றனர். இறந்த ஆன்மாக்கள் மற்றும் யுத்தத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை எண்ணி இம்மக்கள் தினம், தினம் துன்பத்தில் வாடுகின்றனர். இதனால், மனஅமைதியின்மை, குடற்புண், உயர்குருதி அமுக்கம், மாரடைப்பு, உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்ளாகி வருவதுடன் மனநோயாளிகளாகவும் மாறிவருகின்றனர்;. இம்மக்களின் விடிவுக்கு கூட்டுப்பிரார்த்தணையே வழிவகுக்கும்' என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

'இறந்த காலத்தை மறந்து, தொடர்ந்து 45 நாட்கள் தியானம் செய்வதே அம்மக்களின் தற்போதைய தேவையாகவுள்ளது. ஆனாலும் தனி பிரார்த்தனை, கூட்டுப்பிராத்தனையில்கூட இவர்களால் தொடர்ந்து இருக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. அதனைத் தாண்டி தியானத்தில் ஈடுபடுவது அம்மக்களின் கைகளிலேயே உள்ளது' எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வின்போது பெண்ணொருவர், யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடித்தருமாறுகோரி, ஆவணங்களுடன் இந்நிலையத்துக்கு வந்திருந்ததுடன் தனது மகனைத் தேடித்தர உதவுமாறு சிவ கிருபாணந்த சுவாமியிடம் கோரியமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வை தொடர்ந்து கந்தரோடை, சுன்னாகம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மாலை 5 மணிக்கு வயல்வெளிகளிலும் வீடுகளிலும் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X