2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'இலங்கையை பாதுகாப்பது கேள்விக்குறியாக்கியுள்ளது'

Niroshini   / 2017 மார்ச் 25 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

“இலங்கை அரசாங்கம் சர்வதேச நீதி விசாரணை, பொறுப்புக் கூறல் இடம்பெறாது என தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கின்ற நிலையிலும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்து காலத்தை வீணடித்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளையும் நியாயமான தீர்வுகளையும் கிடைக்காமல் எட்டச் செய்வது தான் ஐ.நா தீர்மானத்தின் நோக்கமாக இருக்கலாமே தவிர, இதன் ஊடாக நிச்சயமாக தமிழ் மக்கள் எதிர்பார்த்த விசாரணையோ அந்த விசாரணையோடு தமிழ் மக்கள் எதிர்பார்த்த தீர்வுகளோ அவர்களுக்கு கிட்டுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐ.நா வின் தீர்மானத்துக்கு இரண்டு வருட கால அவகாசத்தை வழங்குவதற்கு தமிழரசு கட்சி ஆதரவளித்துள்ள நிலையில் தமிழரசுக் கட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமா? சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை அமைக்க முடியுமா? சர்வதேச நீதிபதிகளை கொண்டுவந்து வழக்கை நடாத்தமுடியுமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையிலே இலங்கை இரண்டு வருட கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தையே மீளவும் அவ் விடயங்களை மேற்கோள்காட்டி அவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இத்தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடமுறைப்படுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசத்தை பெற்று கொண்டிருக்கும் நிலையில் ஏன் அந்த கால அவகாசம் வழங்கப்பட்டது என்ற கேள்வியெழுந்துள்ளது.

ஏனெனில், ஜனாதிபதி பயங்கரவாதத்தை தோற்கடித்த இராணுவத்தின் கௌரவத்தை பாதிக்கும் வகையில் நான் செயற்பட போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேபோன்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் இலங்கையில் சர்வதேச நீதிபதிகளையோ சட்டத்தரணிகளையோ சர்வதேச வழக்கு தொடுநர்களையோ அழைக்க வேண்டிய அவசியம் இல்லை. அழைக்கப்போவதுமில்லை என்ற அடிப்படையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியானது, நாட்டில் யுத்தக்குற்றமே நடைபெறாத நிலையில், ஏன் கலப்பு நீதிமன்றம் தொடர்பான கேள்வியெழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இவற்றைவிட நாட்டின் நீதியமைச்சர் போர் குற்றத்தை விசாரித்தால் நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படும் என தெரிவித்துள்ளார். இதேபோன்று கலப்பு நீதிமன்ற விடயததை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் லக்ஸ்மன் யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில், இந்த அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது, நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் கோருகின்ற, பாதிக்கப்பட்ட மக்கள் கோருகின்ற நீதியை வழங்க முடியாது. அவ்வாறு நீதியை வழங்கினால் சிங்கள மக்கள் கொதித்தெழுவார்கள் மீண்டும் போராட்டம் ஏற்படும் என தமது நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்கள்.

இத்தகைய நிலையில் ஐக்கிய நாடுகள் வலியுறுத்துகின்ற பொறுப்புகூறல் என்ற விடயமும் இடம்பெறப் போவதில்லை. எனெனில், பொறிப்புகூறல் இடம்பெறுவதற்கு நீதிவிசாரணை இடம்பெற வேண்டும். ஆனால் ஜனாதிபதி - பிரதமர் மற்றும் அரசாங்கம் கூறுவது போன்று விசாரணையே இடம்பெறாத நிலையில், ஐக்கிய நாடுகள் வலியுறுத்துகின்ற பொறுப்பு கூறல் என்பதும் இடம்பெறபோவதில்லை. இவ்வாறான விடயங்களை ஒட்டுமொத்தமாக பார்கும் போது இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய செயற்பாடானது இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான ஒரு செயற்பாடகவே உள்ளது.

மேலும் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கிய செயற்பாட்டுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே தமிழரசு கட்சி மாத்திரமே தமது ஆதரவை வழங்கியுள்ளது. இத்தகை நிலையில் தமிழரசு கட்சி தாம் ஆதரவினூடாக எதனை சாதிக்கப் போகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். அத்துடன், இவ் கால அவகாசத்துக்கு ஆதரவழித்த தமிரசு கட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில் சர்வதேச நீதிவிசாரனை ஆணைக்குழுவையோ அல்லது சர்வதேச நீதிபதிகளையோ சர்வதேச சட்டத்தரணிகளையோ வழக்கு தொடுநர்களையோ கொண்டுவர முடியுமா என்ற கேள்வியும் உள்ளது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X