2025 ஜூலை 19, சனிக்கிழமை

'உயிர்த் தியாகங்களால் ஏற்படும் சிறை மீட்பு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும்'

George   / 2016 ஜனவரி 09 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

மாணவன் செந்தூரன் போன்றோர்களது உயிர்த் தியாகங்கள் மூலம் ஏற்படும் சிறை மீட்பு தொடர்ந்தும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் என ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி விடுதலையாகியுள்ள தமிழ் அரசியல் கைதி சிவராஜா ஜெனிகன் சனிக்கிழமை (09) தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் 26ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த மாணவன் இ.செந்தூரனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோர்களை சந்தித்த பின் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மன்னிப்பில் நான் தற்போது விடுதலையாகியுள்ளேன். இன்னும் என்போன்ற பல அரசியல் கைதிகள் சிறை வாழ்க்கையை அனுபவிக்கின்றனர். இந்நிலையில், எமது விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மாணவனின் குடும்பத்தை நேரில் சந்திப்பதற்கு வந்துள்ளேன். இது எனது தனிபட்ட முடிவல்ல. ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளின் விருப்பம். நான் விடுதலையாகும் போது கட்டாயம் செந்தூரனின் வீட்டுக்குச் செல்லும்படி என்னிடம் சக அரசியல் கைதிகள் கூறினர்.

இவ்வாறான உயிர்த்தியாகங்களின் ஊடான சிறைமீட்பு சரியானதல்ல. இதனால், நாம் விடுதலையாகியும் குற்ற உணர்ச்சியிலேயே எமது வாழ்வை தொடரும் நிலை காணப்படும் என்றார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற சிவராஜா ஜெனிகன், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (08) ஜனாதிபதியை சந்தித்தபோது, அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், 10 வருட சிறை வாசத்தின் பின்னர் சனிக்கிழமை (09) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஜெனிகன், தனது வீட்டுக்குச் செல்லும் முன்னர் செந்தூரனின் வீட்டுக்குச் சென்றார்.
இன்றைய தினம் செந்தூரனின் 45ஆம் நாள் கிரியை இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X