2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

‘கூட்டமைப்பைச் சிதைக்க தென்னிலங்கையில் சதி’

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

“பலமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து கருணா அம்மானைப் பிரித்தது போன்று, பலமாகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சிதைக்க, தென்னிலங்கை அரசியல் சக்திகள் முயற்சி செய்து வருகின்றன” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

கிளிநொச்சி, திருநகர் பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 

“விடுதலைப் புலிகள் பலமாக இருந்தபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டது. அரசியல் ரீதியான செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் ஆலோசனைகளோடு செய்யப்பட்டன. இன்று எமது பலம் மௌனிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், முஸ்லிம் தேசிய இனங்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்தாது, தென்னிலங்கை ஆட்சி பீடத்தை அவர்களால் அசைக்க முடியாது. ஆகவே, அரசியல் சாசனம் வழங்காதவாறும் அரசாங்கங்கள் பார்த்துக்கொண்டன. ஆனால், இது கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் மக்கள் வழங்கிய வாக்கின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. 

சிங்கள மக்கள் வழங்கிய வாக்குகளை விட தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வழங்கிய வாக்குகளால் புதிய ஜனாதிபதி உருவாக்கப்பட்டார். இதன்மூலம் சிறுபான்மை இனத்தினுடைய பலத்தை தென்னிலங்கை புரிந்து கொண்டது. 

ஐ.நா தீர்மானத்தினையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு. எதிர் அரசியல் செய்வது போன்று எந்தவொரு தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாதாகையால், அரசாங்கத்துக்குச் சில சமயங்களில் ஆதரவினையும், எதிர்க்க வேண்டிய சமயங்களில் எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றோம். 

இதற்காகவே நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கின்றோம். இனத்தை அடிமைகளாக்கியிருந்தால், இன்றும் அமைச்சுப் பதவிகளை வகித்திருக்க முடியும். பலமாக இருந்த விடுதலை புலிகளின் தளபதி ஒருவரை பிரித்தது போன்று இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருக்கக்கூடாது என்பதற்காக சில முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன” என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X