2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

குடியிருப்பு பகுதிக்குள் இராணுவ பயிற்சி: ஜனாதிபதிக்கு கடிதம்

George   / 2016 செப்டெம்பர் 16 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

“மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இராணுவத்தினர் பயிற்சிகள் மேற்கொள்வதை நிறுத்துங்கள்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.  

அக்கடித்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கும் இராணுவம், தமது பயிற்சிகளை, பொதுமக்கள் குடியிருப்புகள் இல்லாத இடங்களில் மேற்கொள்வதுதான் எந்தவொரு நாட்டினதும் வழக்கமாகும். அவ்வாறிருக்கையில், வவுனியா மாவட்டத்திலுள்ள செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ், மக்கள் செறிந்து வாழும் மாணிக்கம் பண்ணையிலும் (மெனிக் பாம்) வவுனியா பிரதேசத்தின் சாந்தசோலை கிராமத்திலும் இராணுவம் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையை அங்கு வசிக்கும் மக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்கள்.  

தமது குடியிருப்புக்களுக்குள் இராணுவப் பயிற்சி இடம் பெற்றுவருவது தொடர்கதையாவே இருந்து வருவதாகவும் என்னிடத்தில் சுட்டிக்காட்டியுள்ள அக்கிராம மக்கள்,  அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

அண்மையில் மன்னாரில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் பயிற்சி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளமையையும் இருதய நோயாளர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அச்சத்தின் காரணமாக, உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருப்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது.  

ஆகவே, ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைதியான சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் தமிழ் மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இராணுவத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அமைந்திருப்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.  

மீண்டும் மீண்டும் தமிழர்கள் செறிந்து வாழும் குடியிருப்புக்களுக்கு மத்தியிலும் அப்பகுதிகளுக்கு அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற இராணுவ ஆயுதப் பயிற்சி நடவடிக்கைகளால் எமது மக்கள் அச்சத்திற்குள் உறைந்துள்ளனர்.  

நாட்டின் ஒரு பகுதி மக்களை அச்சத்தின் பிடியில் வைத்துக்கொண்டு, நல்லாட்சி நடத்துவது என்பது இயலாத காரியமாகும்.   
ஆகவே, தாங்கள் இந்த விடயத்தில் உடன் கவனம் செலுத்தி எமது மக்களின் அச்சமற்ற சுதந்திரமானதும், பாதுகாப்பானதும் வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கிறேன்” என அந்தக் கடித்த்தில் எழுதப்பட்டுள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X