2025 ஜூலை 23, புதன்கிழமை

'சும்மா இருக்கும் இராணுவத்தினர் கால்வாய்களை துப்பரவு செய்யலாம்'

Niroshini   / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன்

போர்க்காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள கால்வாய்களை பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவத்தினர் மூடினர். மூடிய கால்வாய்களை தற்போது, வேலைகள் அற்று சும்மா இருக்கும் இராணுவத்தினர் துப்பரவு செய்யவேண்டும். இது தொடர்பில் இராணுவத்தினருடன் பேசவுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (15) முதல் நடைபெற்று வருகின்றது. இதில் முதலமைச்சரின் கீழான அமைச்சுக்களின் நிதிப்பயன்பாடு தொடர்பான விவாதம் புதன்கிழமை (16) நடைபெற்றது.

போர் நடைபெற்ற போது, விடுதலைப் புலிகள் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கால்வாய்கள் இராணுவத்தினரால் கம்பிகள் மற்றும் அடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு அடைக்கப்பட்டன. அந்த அடைப்புக்கள் தற்போது வரையில் எடுக்கப்படாத நிலையிலுள்ளதால் பல கால்வாய்கள் தூர்ந்து போயுள்ளன.

இதனால், கழிவுநீர் உரிய முறையில் செல்ல முடியாமல் இருக்கின்றது. ஒரு கனமழை பெய்தால், யாழ்.நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருக்கும் என ஆளுங்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

படையினர் தான் கால்வாய்களை அடைத்தார்கள் என இப்போதுதான் அறிகின்றேன். அடைத்தவர்களைக் கொண்டே கால்வாய்களின் அடைப்புக்களை எடுக்க வேண்டும். அவர்கள் இங்கு சும்மா தானே இருக்கிறார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .