2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்தவும்'

Niroshini   / 2016 ஜூன் 22 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி கடற்றொழிலாளர்களினாலும் பாரிய பாதிப்புகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே, இச் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு அனுப்பிவைத்துள்ள  கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

“முல்லைதீவு மாவட்டத்தில் தென் பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்தக் கோரி பல தடவைகள் வலியுறுத்தியுள்ளேன். இதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தாங்கள் உறுதியளித்துள்ள போதிலும், அச் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாகத் தெரியவரவில்லை. இதற்கென தாங்கள் அமைத்த குழுவும் உரிய முறையில் நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிகளிலும் தென் மாகாண கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்வதாகத் தொடர்ந்தும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இவர்களால் எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், எமது கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களில் பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி இன்று வரையிலும் அப் பாதிப்புகளிலிருந்து மீள இயலாதிருக்கும் எமது கடற்றொழிலாளர்களின் நிலையை எண்ணி, அவர்களுக்கு மேலும் உதவிகளை வழங்க வேண்டியுள்ள நிலையில், இவ்வாறான பாதிப்புகளை உண்டாக்குவது எவ்வகையிலும் மனித நேய செயலாகாது. எனவே, இத்தகைய செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X