2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'நீதியான முறையில் நியமனங்கள் வழங்கப்படுகின்றன'

George   / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடமாகாண சபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக் கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன' என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள்;, சாரதிகள், அலுவலகப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 160 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். 

அவர் தொடர்ந்து கூறுகையில், 'எங்களிடம் தினமும் ஏராளமானோர் வேலை தேடி வருகிறார்கள். சுயமாகத் தொழில் முனைவோராக மாற எவருக்கும் விருப்பமில்லை. எல்லோரும் அரச பணிகளில் நியமனம் பெறவே விரும்புகிறார்கள். எங்களுக்கு வாக்களித்ததாக கூறி வேலை தருமாறு கேட்கிறார்கள். மத்திய அமைச்சர்கள் சிலரின் பெயர்களைக்கூறி நூற்றுக்கணக்கில் அவர்களது ஆதரவாளர்களுக்கு அவர்கள் வேலை பெற்றுக்கொடுக்கிறார்கள், உங்களால் ஏன் முடியவில்லை என்று கேட்கிறார்கள்.

மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்களுக்கு மாத்திரமே மாகாண சபையால் நியமனங்களை வழங்க முடியும். அதுவும் பரீட்சைகள் நடத்தி, நேர்முகத்தேர்வுகள் வைத்து தகுதியின் அடிப்படையிலேயே மாகாணசபை நியமனங்களை வழங்குகிறது. முறையற்ற விதத்தில் எவ்வகையான நியமனங்களையும் யாரும் வழங்கிவிட முடியாது என்பதை எங்களிடம் வேலை கேட்டு வருபவர்களுக்கு நாங்கள் விளக்கி வருகிறோம். இங்கு நியமனம் பெற்ற எல்லோரும் தகுதி அடிப்படையிலேயே, எவரது பரிந்துரைகளும் இல்லாமலேயே நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.

வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) திருமதி ச.மோகநாதன், அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள்ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X