2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'பேரவையின் நகர்வுகளில் தமிழர்களுக்கு நம்பிக்கையில்லை'

George   / 2016 நவம்பர் 07 , மு.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவையாக அமையவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதா இல்லையா? என்பதிலேயே தெளிவற்ற நிலைதான் உள்ளது. சிறுபான்மையினரை இரண்டாந்தரப் பிரஜைகளாகத்தான் பிரதான கட்சிகள் மதிக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   

வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்துக்கான பாராட்டு விழா, கரவெட்டி தச்சை ஐங்கரன் அறநெறிப் பாடசாலை மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.   

அவர் தொடர்ந்து கூறுகையில்,“இன்றைய உலகில், ஊடகங்கள் சக்தி வாய்ந்த சாதனங்கள் ஆகியுள்ளன. ஊடகங்களைப் புறக்கணித்துவிட்டு எவரும் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊடகவியலாளர்களுக்குள்ள சமூகப் பொறுப்பும் அதிகரித்திருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். ஊடகங்கள் சமூகப் பொறுப்புடனும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் செயற்பட வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றன.  

நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றை, ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கின்றோம். ஒரு காலத்தில் ‘ஈழம் தவிர்ந்த எல்லாம் தரலாம்’ என முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச அடிக்கடி சொல்வார். ஆனால், எதனையும் தர அவர் தயாராக இருக்கவில்லை. இப்போதும் அதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது. எல்லாம் திறந்துவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டாலுங் கூட, மறைமுகமான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் தொடரத்தான் செய்கின்றன.   

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை வடபகுதியில் வைத்துக்கொண்டு மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? எப்படித் தொழில் செய்ய முடியும்? இது போன்ற பல்வேறு நெருக்கடிகள் எம் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கப்பட்டுள்ளன.  

ஊடகவியலாளர் நிமலராஜின் 16ஆவது ஆண்டு நினைவுதினம், கடந்த மாதம் நினைவுகூரப்பட்டது. நிமலராஜனில் ஆரம்பமாகி இந்த 16 வருட காலத்தில் சுமார் 40 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் இலங்கை முழுவதிலும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமற்போயிருக்கின்றார்கள் எனக் கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.   

இதில் 3 பேரைத் தவிர்ந்த ஏனைய அனைவருமே தமிழர்கள். இவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னைய ஆட்சியில் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்ற நம்பிக்கையும் அப்போது இருக்கவுமில்லை. கடந்த (2015) ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ஊடகவியலாளர்கள் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பான விசாரணைகளை மட்டுந்தான் புதிய அரசாங்கம், மீள் விசாரணைக்கு எடுத்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையும் இல்லை என்ற நிலைதான் தொடர்கின்றது.   

கடந்த மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இது தொடர்பில் அவரிடம் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு நீதி, சிங்கள ஊடகவியலாளர்களுக்கு இன்னொரு நீதி என்ற நிலை தொடர்ந்தால் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்?  

தமிழர்களின் நியாயமான அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கும் போது எம்மை தீவிரவாதிகள் அல்லது கடும் போக்காளர்கள் என முத்திரை குத்துகின்றார்கள். இவ்வாறான ஒரு போக்கை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.  

மாகாணசபைத் தேர்தலின் போது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் எதனைச் சொல்லி வாக்குக் கேட்டோமோ அதனைத்தான் இப்போதும் கேட்கின்றோம். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அல்லது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.   
அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவையாக அமையவில்லை. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதற்கடுத்ததாக சர்வஜன வாக்கெடுப்பு என்றத் தடையும் உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி, நியாயமான ஒரு தீர்வுக் கிடைத்தால், நாம் அதனை நிச்சயமாக வரவேற்போம். ஆனால், அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா? அதனை நாம் எவ்வாறு உருவாக்கப்போகின்றோம்? வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பலன்?” என்று சி.வி, கேள்வியெழுப்பினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X