2025 ஜூலை 19, சனிக்கிழமை

'பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது'

Niroshini   / 2016 ஜனவரி 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளில் ஏதாவது மாற்றங்கள் தென்பட்டால் அவை குறித்து மிக அவதானமாக ஆராயுங்கள். அதற்காகப் பிள்ளைகளைக் கடுமையாக கண்டித்து விடாதீர்கள். பிள்ளைகளுடன் அன்பாகவும் அரவணைப்பாகவும் அதேநேரம் பழக்கவழக்கங்கள் குறித்து கூடிய கண்டிப்புடனும் பிள்ளைகளை வளர்க்க முற்படுங்கள். எங்கள் பிள்ளைகள் தான் எங்களின் உண்மையான சொத்தும் சுகமும் என்பதை மறந்து விடாதீர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார், எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை(09) புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடம் ஆகியவற்றை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சிலர் இத்திறப்பு விழாவுக்கு என்னை வரவிடாது தடுக்க சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதை அவர்கள் அறியாமல் விட்டது மனவருத்தமாக இருக்கின்றது.

எமது மார்க்கங்கள் வேறுபட்டிருக்க முடியும்;. ஆனால் தமிழர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாகவே வாழ்கின்றோம்.

முன்னர் மக்கள் மிகவும் அமைதியாகவும் அன்னியோன்னியமாகவும் இலங்கையின் எப்பாகத்திலும் எந் நேரத்திலும் கடமையாற்றக் கூடிய ஒரு சூழ்நிலை இருந்ததை நினைவு கூர்கின்றேன். அப்போது மக்களிடையே போட்டித் தன்மை மிகக் குறைவு. ஆனால், அந்த நிலை இன்று  இல்லை.

நல்ல பல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வஞ்சகம், பொறாமை, சூது என எந்த மார்க்கமும் போதிக்காத பல தீய பழக்க வழக்கங்களை எம்மிடத்தே சேர்த்துக் கொண்டு எந்த நேரமும் ஏனையோருக்கு இடைஞ்சலாக இருத்தல் அல்லது ஏனையோரின் சொத்துச் சுகங்களை நாம் அபகரித்துவிட வேண்டும் என்ற மிகக் கீழ்த்தரமான எண்ணங்களைக் கொண்டவர்களாக மாறியுள்ளோம்.

இந்த அவசர உலகத்தில் அனைவருந் திடீர் பணக்காரர்களாக வருவதற்கே விரும்புகின்றார்கள். இழிதொழில் செய்தாவது திடீர் பணக்காரர்களாக மாறிவிட வேண்டும் என்ற துடிப்பில் பலர் இருக்கின்றார்கள்.

போதைப் பொருள் கடத்தல், மது பாவனை போன்ற தொழில்களை சிலர் மேற்கொள்வதன் மூலம் நாம் பாரிய பின்னடைவுகளையும் பயங்கர பின்விளைவுகளையும் விரைவாக எதிர்நோக்க வேண்டியவர்களாக உள்ளோம். எனவே, இவை குறித்து மிகவும் உன்னிப்புடன் செயற்பட வேண்டிய காலம் இது என்றார்.

மாணவர்களுக்கும் நான் அறிவுரை ஒன்றை கூற வேண்டும். உங்களுக்குப் பழக்கமில்லாதவர்களுடன் நெருங்கிப் பழக வேண்டாம். அவர்கள் தருகின்ற தின்பண்டங்களையோ அல்லது இனிப்புக்களையோ வாங்க வேண்டாம்.

ஏனெனில் போதைப் பொருள் பழக்கவழக்கங்களுக்கு உங்களை ஆளாக்குவதற்குப் பல வழிகளிலும் சூத்திரதாரிகள் முயன்று வருகின்றார்கள். நாம் விழிப்பாக இருந்தால் எம்மை எவரும் மாற்றிவிட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X