2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நலன்களில் அக்கறை காட்டுங்கள்'

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், அம்மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களது நலன்கள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். நாடாளுமன்றத்திலும் இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளேன்' என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில், ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'எனினும், இம்மக்களது தேவைகள் தொடர்பில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், அம்மக்களுக்கு நடைமுறை ரீதியில் அந்த வேலைத்திட்டங்கள் போய்ச் சேரவில்லை என்பதையே, காணக்கூடியதாகவுள்ளது. இம்மக்களது நலன்களில் அரசாங்கம் போதிய அக்கறையுடன் அவதானமெடுக்க வேண்டும்.

இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்கள், அடிப்படை வசதிகள் இன்றிய நிலையிலேயே, வாழ்ந்து வருகின்றனர். நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த நிலையில், அம்மக்களது சொந்த நிலங்கள் பாவனையின்றிய காரணத்தால், காடு மண்டிப் போய்க் காணப்படுகின்றன.

இடம்பெயர்ந்து பல வருட காலமாக உரிய வருமானம் இல்லாத நிலையில் வாழ்ந்திருந்த இம் மக்களால் அப்பகுதிகளை சுத்தஞ் செய்து, உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ள இயலாதுள்ளது.

எனவே, மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முடித்துவிட்டோமென தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் கூறுவதற்காக, மக்களை அவர்களது சொந்த நிலங்களில் கொண்டு விடுவது மாத்திரம் மீள்குடியேற்றமாகாது என்பதை அரசு புரிந்துகொண்டு, உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.

தேசிய நல்லிணக்கம் தொடர்பில், பல முயற்சிகளை முன்னெடுத்து வரும் அரசு, தேசிய நல்லிணக்கத்தின் எண்ணப்பாடுகளை முதலில் எமது மக்களின் மனங்களில் உருவாக்க வேண்டும். அதற்கு எமது மக்கள் தங்களது வாழ்க்கையை நிம்மதியாக அமைத்துக் கொள்வதற்கான வழிகளை செய்துகொடுக்க வேண்டும். அந்த வகையில், அடிப்டையில் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய தேவையிலேயே எமது மக்கள் இருக்கின்றனர். இத்தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அந்த வகையில், எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பான எனது கேள்விகளுக்கு பதிலளிக்கும் அரசு, அதனை நடைமுறைச் செயலிலும் காட்ட வேண்டும்' என டக்ளஸ் தேவானந்தா, வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X