2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

'மங்கையற்கரசியின் மறைவு தமிழர்களுக்கு பேரிழப்பு'

George   / 2016 மார்ச் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

'தாய்த் தமிழகத்தில் உள்ள எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எமது மக்கள் மட்ட துன்ப துயரங்களை தெளிவாக எடுத்துக்கூறி அவர்களை எமது போராட்டத்தின்பால் ஈர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்த மங்கையற்கரசியின் மறைவு தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்' என தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று புதன்கிழமை கூட்டணி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

'தமிழர் போராட்ட வரலாற்றின் முதற்கட்டமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்துதான் ஆரம்பமானது. 1972ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம் எங்கும் தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களின் விடிவுக்காக ஒன்று திரண்டு குரல் கொடுத்த நேரம் அது. 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமாக அமரர் அ.அமிர்தலிங்கம் செயலாற்றிக் கொண்டிருந்தார். அவரின் அத்தனை நடவடிக்கைகளிலும் மங்கை அக்கா என்று எங்களைப் போன்றவர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அமரர் மங்கையற்கரசியின் பங்களிப்பு இருந்தது. 

தன்னுடைய கணீர் என்ற பேச்சுக்களால் தமிழ் மக்களை கவர்ந்தவர். மேடைகளில் தமிழீழ தேசிய கீதத்தை பாடும்போது தமிழ் மக்கள் மெய்மறந்து போவார்கள். அன்னாரின் உணர்ச்சிமிக்க வார்த்தைகளே தமிழ் மக்களை தமிழ் தேசியத்தின்பால் ஈர்த்தது. தமிழ் மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்து உழைத்த முதன்மைப் பெண்மணி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் என்றால் அது மிகையாகாது.

1977ஆம் ஆண்டு அமரர் அமிர்தலிங்கம், வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டபோது அவருக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டவர் என்பதோடு மட்டுமல்லாமல் அவரின் அத்தனை வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தவர் மங்கையற்கரசி. 

குறிப்பாக தாய்த் தமிழகத்தில் உள்ள எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு எமது மக்கள் மட்ட துன்ப துயரங்களை தெளிவாக எடுத்துக்கூறி அவர்களை எமது போராட்டத்தின்பால் ஈர்த்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தவர் மங்கையற்கரசி. அவரைப் போன்ற பெண்மணி ஒருவர் இனி எம் மண்ணில் பிறப்பது அரிது. 

அன்னாரின் மறைவு தமிழ் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரின் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். 

அத்துடன், அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக எதிர்வரும் சனிக்கிழமை (19) திகதி காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவலடியில் அமைந்துள்ள எமது தலைமை செயலகத்திலும் ஞாயிற்றுக்கிழமை(20) காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள எமது கட்சியின் மாவட்ட செயலகத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெறும் என்பதையும்; அறியத்தருகின்றோம்' என தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X