2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

'மணல் நடைமுறையில மாற்றம் வேண்டாம்'

George   / 2017 மே 10 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள், கிரவல் மணல் எடுப்பதற்கு ஏதுவாக வழங்கப்பட்டு வந்த நடைமுறையைத் தொடர்ந்து பேண வேண்டும்” என, ஜனாதிபதி மற்றும், மத்திய கனியவள அமைச்சர் ஆகியோரிடம் வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது.

“மேலும், மாகாணத்தின் கனிய வளங்களை அரசாங்கம் தனது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வருவதை தவிர்த்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 92 ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண சபையின் பேரவைச் செயலகத்தில், பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

இதன்போது, சபையின் உறுப்பினர் ம.தியாகராசா கொண்டு வந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்த மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்தப் பிரேரரணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “வடமாகாணத்தில் உள்ள கனியவளங்கள் அனைத்தும் அரசாங்கம் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் உள்ளதால், பல காலமாக அனுமதி பெற்று மணல், கிரவல் எடுக்கும் ஒப்பந்தகார்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதனூடாக, வடமாகாண கனிய வளத்தை அரசாங்கத்துக்கு கீழ் கொண்டு வந்து, தனியாருக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

அரசாங்கத்தின் தீர்மானத்தால் வட மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டு கிரவல் மணல் பெற்று வந்த 5000க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நம்பியுள்ள சுமார் 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

அத்துடன், பல ஆயிரம் ரூபாய் கொடுத்து மணல் வாங்கவேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 23,000 குடும்பங்களின் நிலையைக் கருத்திற்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் கிரவல் மணல் எடுப்பதற்கான நடைமுறையைத் தொடர்ந்து பேண வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இடம்பெற்ற வாத விவாதங்களை அடுத்து, பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X