2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

'யாழில் இளைஞர்கள் நிலை மோசமானது'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு போதைப்பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். புத்திஜீவிகள் குழுவினர், திங்கட்கிழமை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,

போதைப்பொருட்கள் பெருமளவில் கடத்தப்படும் ஒரு தளமாக வடக்கு மாகாணம் தற்போது மாறியுள்ளது. குறிப்பாக, கேரள கஞ்சா யாழ். குடாநாட்டின் ஊடாக அதிகளவில் கடத்தப்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் தொடர்ந்தும் இவற்றைக் கைப்பற்றி வருவதாகவும், சந்தேகநபர்களைக் கைதுசெய்து வருவதாகவும் கூறுகின்ற நிலையிலும் மேற்படிக் கடத்தல்கள் குறைந்தபாடில்லை.

எமது மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நீதித்துறை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக ஊடக செய்திகளின் மூலம் தெரியவருகிறது.  

எம்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிறோம் எனக் கூறிக்கொண்டு இவர்கள் எமது மக்களைச் சீரழிக்கும் இவ்வாறான விடயங்களில் ஈடுபட்டும், ஈடுபடும் பிற நபர்களை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

பொலிஸாரினால் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற பகுதிகளைப் பார்க்கின்றபோது, அப்பகுதிகளிலேயே அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதுடன், குறிப்பாக கல்வி நிறுவனங்களை அண்மித்த பகுதிகளாக இவை அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆக, இவ்வாறான போதைப்பொருள் விற்பனைகள் எமது இளம் சந்ததியினரை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுக்கும் முயற்சியில் பொலிஸார் மட்டுமே ஈடுபடுவர் என இருந்துவிடாது, எமது சமூக நலன்சார் அமைப்புகள், புத்திஜீவிகள், சமய மற்றும் சமூகப் பெரியார்கள் அனைவரும் ஈடுபட வேண்டுமென்றும், பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X