2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம்

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் அண்மைக்காலமாகப் பல தனியார் நிறுவனங்கள் புதிய பயிரினங்களை விவசாயிகளிடையே அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிறுவனங்களின் நம்பகத்தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

எழுதுமட்டுவாழ் பிரதேச கமக்கார அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் இடையிலான கலந்துரையாடல், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) எழுதுமட்டுவாழ் ஸ்ரீகணேச வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றும்போதே அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

யாழ்ப்பாணத்தில் இஞ்சி வளர்ப்பை அறிமுகம் செய்த தனியார் நிறுவனம் ஒன்றால் தாங்கள் இலட்சக்கணக்கான ரூபாய் நட்டம் அடைந்திருப்பதாக பல விவசாயிகள் எங்களிடம் முறையிட்டுள்ளனர். நட்டஈட்டைப் பெற்றுத் தருமாறு கோரி ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் கடிதங்கள்கூட அனுப்பி வைத்திருக்கின்றனர். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையை எங்களுடைய விவசாயிகள் தவிர்த்திருக்கமுடியும்.

யுத்தத்துக்குப் பிறகு அபிவிருத்தி என்ற பெயரில் பல தனியார் நிறுவனங்கள் சந்தனமரம், இஞ்சி என்று பல புதிய பயிர்களை அறிமுகம் செய்து வருகின்றன. புதிய பயிரினங்களை அறிமுகம் செய்யும்போது முதலில் அவை எமது பிரதேசத்துக்குப் பொருத்தமானவையா என்று தீர்மானிக்க வேண்டும்.

இஞ்சி வளர்ப்பில் விவசாயிகளை ஈடுபடுத்திய தனியார் நிறுவனம் விவசாயிகளுக்கு முழங்காவிலிருந்து மண்ணை எடுத்து வந்து கொடுத்திருக்கிறது. பெரும்பாலும், விவசாயத் திணைக்களத்தின் கவனத்துக்கு வராமலேயே இவை இடம்பெறுகின்றன.

அதிக இலாபம் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி எமது விவசாயிகளும் இவற்றில் முதலீடு செய்கிறார்கள். கடைசியில், இலவு காத்த கிளியாக ஏமாறும்போதே நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாறு கோரி எங்களிடம் வருகின்றார்கள்.

இது தொடர்பாக நாங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டால் எங்களை அபிவிருத்திக்கு எதிரானவர்களாகச் சமூகத்துக்குக் காண்பிக்கும் முயற்சியில் அந்நிறுவனங்கள் ஈடுபடுகின்றன.

தனியார் நிறுவனம் ஒன்றில் எமது விவசாயிகள் இஞ்சியில் பெரும்பணத்தை முதலீடு செய்வது தெரிய வந்த உடனேயே எமது விவசாயத் திணைக்கள அதிகாரிகள் இது தொடர்பாக விழிப்பாக இருக்குமாறு ஊடகங்களின் மூலம் கேட்டிருந்தார்கள். இப்போதும் அதே நிறுவனம் தங்களிடம் காளான் செய்கையில் முதலீடு செய்யுமாறு விவசாயிகளைக் கேட்டுவருகிறது.

இஞ்சி, காளன் செய்கை தொடர்பாக எமது விவசாயத் திணைக்களம் எவ்வித கட்டணங்களும் இல்லாமல் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இலவசமாக நடுகைப் பொருட்களையும் வழங்கிவருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பகுதி விவசாயப் போதனாசிரியரின் ஆலோசனைகளைப் பெற்றே புதிய பயிரினங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வரவேண்டும். தனியார் நிறுவனங்களின் நம்பகத் தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், வாக்குறுதிகளை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X