2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள் சிறந்து விளங்கினர்’

Princiya Dixci   / 2017 மார்ச் 28 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில்தான் தமிழ்ப்பெண்கள், சகல துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள்” என, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

விழுதுகள் அமைப்பினால் திங்கட்கிழமை (27) நடத்தப்பட்ட 'செங்கோலோச்ச விழையும் பெண்களுக்கோர் பாராட்டுவிழா' நிகழ்வில் விருந்தினராகக் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது தமிழினத்தின் அரசியல் வரலாற்றில் பெண்களுக்குத் தனியான ஓர் இடமிருக்கிறது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிலர், வெற்றி பெற்றிருக்கிறார்கள் பலர், தோல்வியுற்று இருக்கிறார்கள். ஆனால், விடுதலைப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் பெண்கள் பல்பரிமாணத்துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தார்கள். 2009ஆம் ஆண்டு இறுதியுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் எமது பெண்களே அதற்குப்பின்னர் பெண்கள் அரசியலில் ஈடுபடவே அஞ்சினார்கள்.

“கடந்த முறை நடைபெற்ற உள்ளூராட்சித்தேர்தலிலும் பெண்களை ஈடுபடுத்த முயற்சித்தோம். யாரும் முன் வரவில்லை. தற்போது அரசியலில் ஈடுபட பெண்கள் எத்தணிப்பது மிகவும் ஆரோக்கியமானது. எங்களுடைய கட்சியிலும் பெண்கள் அணி உண்டு. நூற்றுக்கணக்கானவர்கள் இதில் அங்கத்தவராக உள்ளார்கள். நாங்கள் 25 சதவீதம் என்று இல்லாது அதிலும் அதிகமாக பெண்களுக்குச் சந்தர்ப்பத்தை வழங்குவோம். ஆனால், எங்களுடைய கட்சி சாதாரண கட்சியல்ல. அது விடுதலைக்கான பயணத்தில் ஈடுபட்டு இருக்கின்ற கொள்கை இலட்சியம் என்பவற்றை வென்றெடுப்பதற்கான அரசியல் இயக்கம்.

“2009 வரை விடுதலைப்புலிகள் சுமந்த பணிகளை எங்களுடைய கட்சி இலட்சியம் வெல்லும் வரை ஜனநாயகப்பாதையில் போராடும். நீங்களும் எங்களுடைய கட்சியல் இணைந்து கொள்ளுங்கள். வரலாற்றில் அரசியலில் ஈடுபட்டிருந்த பெண்தலைவர்களால் எத்தனை பெண்களை மேலதிகமாக அரசியலுக்கு கொண்டுவரமுடிந்தது. ஆனால், தலைவர் பிரபாகரனால் பெண்களை அரசியல், படையியல் செயற்பாடுகள் என சகலதுறைகளிலும் வளப்படுத்திக்கொண்டார்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X