2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

'வடக்கையும் கிழக்கையும் இணைக்க இரண்டு பாலங்கள் வேண்டும்'

Niroshini   / 2016 ஜனவரி 18 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்குமான போக்குவரத்தை இலகுபடுத்துவதற்கு வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படுதல் மற்றும் கொக்குளாய் பாலம் உருவாக்குதல் ஆகியன அவசியமானதாகக் காணப்படுகின்றன என்று முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த காலங்களில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக வட்டுவாகல் பாலம் சேதமடைந்துள்ளது. போக்குவரத்தின் முதன்மைப் பாலகமாக விளங்கும் இந்தப் பாலத்தை புனரமைப்பது அவசியமாகும்.

இதேவேளை, முல்லைத்தீவிலிருந்து திருகோணமலைக்கு செல்வதற்கு தற்போது 140 கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில்,கொக்கிளாய் பாலம் அமைக்கப்பட்டால் அந்த தூரம் 104 கிலோமீற்றராக மாற்றமடையும்.

2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் முல்லைத்தீவுக்கான அபிவிருத்தித்திட்டத்தில் வட்டுவாகல் பாலம், புனரமைப்புக்கென உள்வாங்கப்பட்டுள்ளது. மாவட்டத்துடைய அபிவிருத்தித் திட்டங்களில் இப் பாலங்கள் இரண்டும் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

கொக்கிளாய் பாலம் அமைப்பது தொடர்பில் முல்லைத்தீவு, செம்மலை, அளம்பில், கொக்குளாய், கொக்குத்தொடுவாய் உட்பட பல கிராமங்களின் அபிவிருத்திச் சங்கங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போக்குவரத்து அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு கடந்த காலங்களில் மகஜர்கள் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X