2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

வழித்தட அனுமதி மீளாய்வு செய்யப்படும்

Niroshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

வீதி ஒழுங்குக்கமைய செயற்படும் தவறும் பஸ் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் மற்றும் பஸ் சேவையின் வழித்தட அனுமதிகள் என்பன மீளாய்வு செய்யப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை விடுத்தார்.

வடமாகாண போக்குவரத்து அமைச்சினால் 8 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் - மன்னார் வீதியில் நிர்மாணிக்கப்பட்ட முழங்காவில் பஸ் நிலையத்தை இன்று புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகளுக்குமிடையே தினமும் ஒவ்வொரு இடங்களில் வாக்குவாதங்கள், சண்டைகள் நடைபெறுவதை பத்திரிகைகள் வாயிலாக அறிகின்றோம்.

தனியார் பஸ் சாரதிகள் ஆயினும் சரி போக்குவரத்துச் சபை பஸ் சாரதிகள் ஆயினும் சரி நாம் பொதுமக்களுக்கும் பிரயாணிகளுக்கும் மிகச் சிறந்ததும் சௌகரியமானதுமான சேவையை வழங்கவே செயற்படுகின்றோம் என்ற மனப்பாங்கு மேலோங்க வேண்டும்.

எமது கடமை என்ன என்பதில் கண்ணுங் கருத்துமாக இருந்தோமானால் எந்தச் சவால்களையும் சமாளித்துக் கொள்ளலாம் என்றார்.

'நாம் நிதானமாக எமது வாழ்க்கையை வழிநடத்த முன்வரவேண்டும். வடமாகாணசபை உங்கள் சபை. உங்களை ஒன்றுபடுத்தி உலகத்துக்கு எடுத்துக் காட்டும் ஒரு நிறுவனம். சுற்றுச்சூழல், மக்கள் நலம், முன்னேற்றம் என்று பலவற்றையும் சிந்தித்துச் செயலாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

அரச சொத்துக்களும் எமது கரிசனைக்கு உட்பட வேண்டிய சொத்துக்களே. இச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுகின்ற போது நேரடியாகப் பாதிக்கப்படப் போகின்றவர்கள் நாங்களே.

எனவே பஸ் நிலையங்களில் பீடி, சிகரெட் குடித்தல், வெற்றிலை பாவித்து விட்டு எச்சில் உமிழ்தல், சமூக விரோத நடவடிக்கைளில் ஈடுபடுதல் போன்ற செயல்களை நிறுத்துவது மட்டுமன்றி அவற்றில் ஈடுபடுகின்றவர்களை நீங்கள் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உதவி புரிய வேண்டும்.

முழங்காவில் பிரதேசம் ஒரு சிறந்த விவசாய பூமி. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இன்று படையினர் வசம் போய் முந்திரிகைத் தோட்டமாகவும் பழத் தோட்டங்களாகவும் காணப்படுகின்றன.

அவற்றின் பயனை அவர்கள் அனுபவிக்கின்றார்கள். ஆனால் எம்மவரோ, இருக்கின்ற நிலங்களைக் கூட சரியாகப் பயன்படுத்தாது பற்றைக் காடுகளாக படரவிட்டு விட்டுச் சோம்பிக் கிடக்கின்றார்கள். இந்நிலை மாற்றப்படல் வேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X